தமிழக ஆளுநர் மீது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், நேற்று தமிழக ஆளுநர் பத்துக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள மசோதாக்களை மீண்டும் தலைமைச் செயலகத்திற்குத் திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தொடர்பான மசோதா; மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா; வேளாண் பல்கலைக்கழக திருத்த மசோதா; சென்னை பல்கலைக்கழக திருத்த மசோதா; சட்டப் பல்கலைக்கழகத் திருத்த மசோதா; அன்னை தெரசா பல்கலைக்கழக திருத்த மசோதா; மீன்வளம், கால்நடை பல்கலைக்கழக திருத்த மசோதா; தமிழ்ப் பல்கலைக்கழக திருத்த மசோதா; அண்ணாமலை பல்கலைக்கழக திருத்த மசோதா; பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே செயல்பட வகை செய்யும் மசோதா ஆகியவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ''சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக போராடிய உழவர்கள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. நாட்டில் கொள்ளை அடிப்பவர்கள், கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடும் பெரிய பெரிய முதலாளிகளை எல்லாம் விட்டுவிட்டு போராடிய உழவர்கள் மீது குண்டாஸ் போடுகிறீர்கள். குண்டாஸ் போடும் அளவிற்கு விவசாயிகள் என்ன தவறு செய்தார்கள். தமிழ்நாட்டில் சிப்காட்டால் இதுவரை என்ன வளர்ச்சி வந்துவிட்டது. தமிழகத்தில் விளை நிலமே குறைவுதான். இதில் சிப்காட்டிற்காக விளை நிலத்தை கொடுத்தால் வேலை தருகிறோம் என்கிறார்கள். சம்பளம் தருகிறார்கள். சம்பளத்தை வைத்து மூன்று வேளை சாப்பிடுவோம். ஆனால் அந்த சாப்பாடு எங்கிருந்து வரும் என்ற அடிப்படை கேள்வி இருக்கிறது. அரிசி பருப்பை எந்த தொழிற்சாலையும் உற்பத்தி செய்ய முடியாதுதானே. அந்த விளை நிலத்தை பறித்துக் கொண்டால் மண்ணை சாப்பிடுவார்களா அல்லது கல்லை சாப்பிடுவார்களா? எத்தனை சிப்காட் இருக்கு நாட்டில், அதனால் ஏற்பட்ட வளர்ச்சி முன்னேற்றம் என்னவென்று சொல்லுங்க.
மக்களில் இருந்து ஒருவர் அதிகாரத்திற்கு வர வேண்டும். மக்களோடு மக்களாக வளர்ந்து மக்களின் போராட்டத்தில் கலந்து, மக்களுடன் வேர்வையில் நின்று, கட்டிப்பிடிச்சு கண்ணீரை துடைச்சு நிற்பவனை அதிகாரத்தில் வைத்தால் அவருக்கு மக்கள் பிரச்சனை என்றால் என்ன என்று தெரியும். ஆளுநருக்கு மக்கள் பிரச்சனை என்றால் என்ன என்று தெரியுமா? எதுவாக இருந்தாலும் எட்டு கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் நலன் சார்ந்து சட்டங்கள் திட்டங்கள் போட்டு அனுப்பினால் கையெழுத்து போட வேண்டும் அதுதான் உங்க (ஆளுநர்) வேலை. சம்பளம் என்கிட்ட வாங்கிகிட்டு சண்டியர் தனம் பண்ணிட்டு இருந்தா என்ன அர்த்தம். இருக்க வீடு இல்லாமல் மக்கள் இருக்காங்க. ஆளுநருக்கு 150 ஏக்கரில் வீடு. பாஜக ஆளாத மாநிலங்களில் இதுபோன்ற ஆளுநர்களை அனுப்பி மாநில அரசுகளுக்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.