
கோடைக் காலத்தில் தமிழகத்தில் வெப்ப அலை வீசுவது வருடம் தோறும் அதிகரித்து வருகிறது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
தளர்வான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும் என்றும், தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி நீர்ச்சத்துக்கு தேவையான உணவுகளை எடுக்க வேண்டும் என்றும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தொப்பிகள் அல்லது குடைகளை உபயோகிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். பறவைகளுக்கு உணவளிக்கும் காட்சியை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.