
உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களால் இன்று ரமலான் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர் மக்கள் வண்டிகேட் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் தொழுகைக்காக இன்று அதிகாலை ஒன்று கூடினர். இந்த ரமலான் சிறப்பு தொழுகையில் பங்கேற்பதற்காக சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஜாபர் அலி(55) என்வரும் அவரது குடும்பத்தினரும் காலையில் தொழுகை நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

இந்த நிலையில் தொழுகை நடைபெற்று கொண்டிருந்த போது ஜாபர் அலிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டுக் காவல் துறை வாகனத்தின் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் ஜாபர் அலியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ரமலான் பண்டிகை கொண்டாடுவதற்காக புது ஆடைகளை அணிந்து கொண்டு தொழுகைக்காக வந்த இடத்தில் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் துயரமடைந்து கதறி அழுத காட்சி காண்போரையும் கலங்க வைத்துள்ளது.