இன்று (08.10.2021) சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பிரத்தியேக இணையவழி திட்டத்தைத் துவங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு இணையவழி முறையில் திருக்கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதியைத் தொடங்கி வைத்தார். மேலும் வாடகைதாரர்கள் சிலர் வாடகையை அமைச்சரிடமே செலுத்தி ரசீதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை இடத்தில் இருப்பவர்கள் வாடகை மற்றும் குத்தகை தொகையைச் செலுத்துவதற்கான கால அவகாசம் மாதந்தோறும் 10ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குயின்ஸ்லாண்ட் விவகாரத்தில் அறநிலையத்துறையை அதிகாரிகளின் சட்டப்போராட்டங்களுக்கு நீதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். ஒன்றிய அரசின் அறிவுரைப்படியே வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் திறக்கப்படாமல் இருக்கிறது. பாஜகவின் போராட்டம் திசை மாறி நடந்துள்ளது. அதிகமாகக் கூட்டங்கள் கூடுகின்ற நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.
அந்த வகையிலேயே ஒன்றிய அரசை எதிர்த்துப் போராட வேண்டிய அந்த கட்சியினர் தமிழக அரசை எதிர்த்துப் போராடுவதுதான் விந்தையாக இருக்கின்றது. கரோனா நோய்த்தொற்று இல்லை, தாராளமாகக் கூட்டங்கள் கூட்டலாம், திருவிழாக்களுக்கு அனுமதிக்கலாம் என்று ஒன்றிய அரசிடம் இருந்து சுற்றறிக்கை பெற்றுத் தந்தால் உடனடியாக அதை நிறைவேற்றத் தமிழக அரசு தயாராக இருக்கிறது. போராட்டம் திசை மாறி நடந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் உணர்த்த கடமைப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.