Skip to main content

இப்போதே மேடையேறி பதில் சொல்லுங்கள்... பதறிய திமுக நிர்வாகிகள்... கோபமான ஸ்டாலின்! 

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

காருக்குள் கிசுகிசுத்த குரலில் பேசுகிறார் ஒரு நபர்.

அவர், "சரியா மேடம்... பூத் பணம் 10 ஆயிரம் கொடுக்கவேண்டிய இடத்துல 8 ஆயிரம் கொடுத்துர்றேன். கூட்டணிக் கட்சிக்காரங்களுக்கு 8 ஆயிரம் கொடுக்கவேண்டிய இடத்துல 2 ஆயிரம் கொடுத்துர்றேன்'' என்கிறார்.

"அரசியல் தெரியுமல்ல...''’என்று கேட்கிறார் அவர்.

"தெரியும்''’என்கிறது அந்த பெண்ணின் குரல்.

உடனே அந்த நபர், "சுரேஷ்... வெளிய சொல்லிற மாட்டியல்ல...?''’ என்று கேட்கிறார்.

"கழுத்தை அறுத்தாலும் வெளியே சொல்லமாட்டேன்'' என்கிறது அந்த ஆண் குரல். அப்படியே முடிகிறது அந்த வீடியோ.

 

dmk



அந்த நபர்... நீலகிரி மாவட்டத்தின் நெலாக்கோட்டை தி.மு.க.  ஊராட்சி செயலாளரான  பாக்னா அன்வர். இவர், நீலகிரி மா.செ. முபாரக், மாவட்ட துணைச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் மூலம்  கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சிக்குள்  கொண்டுவரப்பட்டவர்.

அந்தப்பெண்... சங்கீதா. அ.தி.மு.க. சார்பாக நெலாக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட நின்ற வேட்பாளர். இன்னொரு நபர் சுரேஷ்.... கார் டிரைவர்.

அந்த சங்கீதாவிடம் 4 லட்சம் பேரம் பேசி,’தி.மு.க.வுக்குள் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் இருந்து வந்த லேடியை பந்தலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளரான சிவானந்த ராஜா  பணம் வாங்கிக்கொண்டு சீட் கொடுத்திருக்கிறார். "அந்த லேடியை தோற்கடிக்க 2 லட்சம் அட்வான்ஸாக கொடுங்கள்'’என வாங்கிக்கொண்டு பாக்னா அன்வர் பேசிய வீடியோதான் அது.
 

dmk



உள்ளாட்சித் தேர்தலில் பண பேரத்தினால் தி.மு.க.வில் ஏற்பட்ட உள்குத்தின் காரணமாகவே இந்த வீடியோ வெளியாகி கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
 

இந்நிலையில், சென்னை அறிவாலயத் தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தபோது உள்குத்து விவகாரம் வெடித்தது. நீலகிரி தலைமைச் செயற்குழு உறுப்பினரான இளங்கோ மேடையேறி, "நீலகிரியின் முக்கிய ஊராட்சியான ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியை நாம் இழந்து நிற்கிறோம். தலைவர் பதவிக்கு தி.மு.க.விற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருந்த போதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்து நம்மைத் தோற்கடித்து விட்டனர்.

கட்சியில் உண்மையாய் வேலை செய்பவர்களுக்கு சீட் கொடுக்காமல், பணம் வாங்கிக் கொண்டு யார் யாருக்கோ சீட் கொடுத்துவிட்டார் மாவட்ட செயலாளர் முபாரக். கடந்த 7 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் இல்லாத நிலையில் பழங்குடியினரிடம் இருந்தும் பணம் வாங்கி இருக்கிறார் முபாரக்' என பொரிந்து தள்ளினார்.

உடனே ஸ்டாலின், "இந்த குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? விளக்கம் சொல்லுங்கள்?''’என முபாரக்கிடம் கேட்டதும், "நான் எழுத்து மூலம் பதில் தருகிறேன்' என்றபோது, ஸ்டாலின் விடாமல், ‘இப்போதே மேடையேறி பதில் சொல்லுங்கள்...''’ என காட்டமாய் சொன்னார்.

கண்கலங்க மேடையேறிய முபாரக், "நான் கட்சி நிகழ்ச்சிகளுக்காகத்தான் பணம் வாங்கினேன். விரைவில் கணக்குகளைச் சமர்ப்பிக்கிறேன்''’என்றார்.

"விவகாரம் இத்தோடு நின்றபாடில்லை. "கூடலூர் தொகுதியை திராவிடமணியும், ஊட்டியை ரவிக்குமாரும், குன்னூரை முபாரக்கும் சேர்ந்து கட்சியை மலைக்குள் மறைத்துவிட்டார்கள்' என தி.மு.க. தலைமைக்கு கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் எங்கள் கட்சியினர்'' என்கிறார்கள் நீலகிரி உடன்பிறப்புகள்.

தி.மு.க. நீலகிரி மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமாரிடம் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, "முஸ்தபாங்கற கட்சிக்காரரு வெற்றிபெற்ற  ஆட்களை மைசூருக்கு கொண்டு போய் வச்சிருந்தாரு. தி.மு.க.வின் ஒன்றியத் தலைவர் வேட்பாளராக காமராஜை கட்சி அறிவித்த பின்னரே நாங்கள் அந்த 4 பேரை கூட்டிவந்தோம். சுயேட்சையில் இருந்து ஒரு ஆளை கூட்டி வந்ததும் நான்தான். வீணா என்மேல பழி சுமத்தறாங்க''’என்கிறார் பதட்டமாய்.


தி.மு.க. கட்சியில் தலைவருக்கு நின்ற காமராஜிடம் பேசியபோது, "4 பேரை மைசூர்ல கொண்டுபோய் வச்சது உண்மைதான். அவுங்களை ஓட்டு போடறதுக்கு கூட்டிட்டு வர பல லட்சங்களை என்னிடமிருந்து முபாரக், ரவிக்குமார் வாங்கிட்டாங்க. சுயேட்சை கவுன்சிலர்கள் ரெண்டு பேர் தி.மு.க.வு.க்கு வருவதாக இருந்தாங்க. அவுங்களுக்கும் பணம் கொடுக்க நான் ரெடியா இருந்தேன். ஆனா முபாரக் கண்டுக்கலை. முபாரக்கும், ரவிக்குமாரும், ஒ.செ. தொரயும் என்னைய க்ளோஸ் பண்ணிட்டாங்க'’என்கிறார் அழாத குறையாக.


நீலகிரி மா.செ. முபாரக்கிடம் நாம் பேசியபோது, "அ.தி.மு.க.வினர் பிரேமாவை  பெருந்தொகை கொடுத்து கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்கே போன பிரேமா புத்திசந்திரனுக்கு சொந்தக்காரப் பொண்ணு. அதனால்தான் தி.மு.க.  வெற்றி வாய்ப்பை உதகையில் இழந்தது. தி.மு.க.வில் இருக்கிற சில கருப்புஆடுகள் செய்கிற வேலையால்தான் இதுவும் நடந்தது. என் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை''’என்கிறார் அழுத்தமாக.

 

 

சார்ந்த செய்திகள்