கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நடராஜன் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நிவேதா ஆகிய இருவரையும் ஆதரித்து சிதம்பரம் காந்தி சிலை அருகே திறந்தவெளி வேனில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, பொதுமக்கள் மத்தியில் பேசிய சீமான், "உண்மையாலுமே ஊழல் லஞ்சத்தை ஒழிக்க நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தாள் நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயச் சின்னத்தை ஆதரிக்க வேண்டும். உங்களுக்காக உங்க பிள்ளைகள் நாங்கள், ஊழல் கட்சிகளிடம் கூட்டணி இல்லாமல் தொடர்ந்து தேர்தலில் களம் கண்டு வருகிறோம். சீமான் கீழே இருந்து வந்தவன் பசி பட்டினி என்றால், என்னவென்று தெரியும். தமிழகத்தில் அனைத்து மக்களும் சமத்துவத்துடனும் பெருமையுடனும் வாழ்வதற்காக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராட்டக் களத்தில் புரட்சிசெய்து வருகிறது. சோறு சாப்பிடும் அனைவரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்பு ஒரு நிமிடம் விவசாயியை நினைவில் நிறுத்தி விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். எனவே, இந்தத் தேர்தலில் ஊழல் லஞ்சத்தை ஒழிக்கும் ஒரே கட்சி விவசாயி சின்னமான நாம் தமிழர் கட்சிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்" என வாக்குச் சேகரித்தார்.