Skip to main content

விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு; பா.ஜ.க.வை விமர்சித்த கே.பி. முனுசாமி!

Published on 14/02/2025 | Edited on 14/02/2025

 

Vijay gets Y category security KP Munusamy criticizes BJP

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் நிலையில் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் பரந்தூர் மக்களை விஜய் அண்மையில் சந்தித்திருந்தார். அதே சமயம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இத்தகைய சூழலில் தான் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒய் பிரிவில் சி.ஆர்.பி.எப். (C.R.P.F. - Central Reserve Police Force) வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என மொத்தமாக 8இலிருந்து 11 பேர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தமிழ்நாட்டிற்குள் மட்டும் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது குறித்துப் பேசுகையில், “எந்த அடிப்படையில் மத்திய அரசு விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு கட்சியினுடைய தலைவராக உருவாகியுள்ளார். நடிகராக உள்ளார். அதன் அடிப்படையில் கூட செயல்படுகின்ற இடத்தில் அவருக்குக் கூட்டம் அதிகமாகக் கூடலாம்.

அதற்காக அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று என்று பெருந்தன்மையாக ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. அரசியல் ரீதியாகச் சுயநலத்தோடு விஜய்யை தன் பக்கம் இழுப்பதற்காக அவரை சந்தோஷப்படுத்துவதற்காக இந்த ஒய் பிரிவு பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் பா.ஜ.க.வின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் எது உண்மை என்று தெரியும்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்