
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில் எம்.ஜி.ஆரின், பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (12.02.2025) நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறார்கள். எனவே தொண்டர்களோடு தொண்டராக இருந்து நான் பணியாற்றி மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம். சில துரோகிகளால் தேர்தலில் தோற்றோம்” எனப் பேசியிருந்தார்” எனப் பேசியிருந்தார்.
இத்தகைய சூழலில் தான் அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் நேற்று (13.02.2025) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “இன்றைக்கு எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அதிமுகவில் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் அதிமுக மக்கள் இயக்கம். மக்களால் பாதுகாக்கப்படுகின்ற இயக்கம். மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம்” எனப் பேசி இருந்ததார். இதனைத் தொடர்ந்து மதுரை குன்னத்தூரில் ஆர்.பி.உதயகுமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரை திறந்த மனதோடு சொல்கிறேன் எடப்பாடி பழனிசாமி, 2 கோடி தொண்டர்களையும் வழி நடத்துகிறார். யாருக்கும் அழைப்பு கொடுப்பதற்காக இந்த வீடியோ பதிவு வெளியிடப்படவில்லை. யாருடைய மனதையும் புண்படும் வகையில் பேசவில்லை. திண்ணை பிரச்சாரத்தை கொண்டு செல்லவே வீடியோ வெளியிட்டேன்'” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக கட்சி சார்பாக சேவல் புறா சின்னத்தில் போட்டியிட்டு கூட வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் இந்த முறை தேர்தலில் தோற்பதற்கு அதிமுகவிற்கு இரு சிலர் துரோகத்தை செய்திருக்கிறார்கள். அதனை கவனமாக நாம் எடுத்துச் செல்ல வேண்டும்என்று பேசி இருக்கிறேன்.

இந்த கருத்து அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். நான் செங்கோட்டையனை விமர்சிக்கவில்லை என ஆர்.பி. உதயகுமாரே கூறிவிட்டாரே” எனப் பேசினார். இதனையடுத்து செய்தியாளர் ஒருவர், ‘கடந்த இரண்டு நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி பெயரை பொதுக்கூட்டத்தில் பயன்படுத்தவில்லை’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு செங்கோட்டையன் பதிலளிக்கையில், “கழகப் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என்று அழுத்தமாக சொல்லி இருக்கிறேன்” என பதில் அளித்தார்.