மும்பையில் உள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (எஸ்.சி.துறை) தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மும்பையில் உள்ள புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களது இல்லத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
மும்பையில் உள்ள தாதர் என்ற பகுதியில் அம்பேத்கர் வசித்த வீடு அவரது நினைவு இல்லமாக உள்ளது. இங்கே கீழ்த்தளத்தில் அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் அம்பேத்கர் பயன்படுத்திய பொருள்கள், குறிப்பாக அவர் எழுதிய நூல்கள் ஆகியவை பார்வையாளர்களுக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு திட்டமிட்டு நுழைந்த வன்முறைக் கும்பல் அந்த வீட்டின் முன்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா, ஜன்னல்கள், வீட்டின் முன் பக்கத்தில் இருந்த பூச்செடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களது வீட்டைச் சிதைப்பது மூலம் நாட்டின் சனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை சிதைத்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். இந்த வன்முறைக்குக் காரணமாக யார் இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கைது செய்து அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை விசாரித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டும்.
மேலும், இச்சம்பவத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை வன்மையாகக் கண்டிக்கிறது'' எனக் கூறியுள்ளார்.