பரபரப்பு கருத்துக்களை பஞ்சமில்லாமல் அதே சமயம் எதுகை மோனையோடு தரக்கூடியவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. அந்த வகையில் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக பதிலளித்த அவர், "கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான பணிகள் அதிகம் இருக்கிறது. இப்போதைக்கு அதுதான் முக்கியமான பணி என்பதால், கூட்டணிக் கட்சியான அதிமுக வேட்பாளரை ஆதரித்து வேலூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. பிற காரணங்கள் ஏதுமில்லை" என்று அவர் கூறினார்.
முத்தலாக் தடை சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியுள்ள நிலையில், வேலுரில் பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்வதை அதிமுக அரசு விரும்பவில்லை என்றும், குறிப்பாக வேட்பாளர் ஏ.சி சண்முகம், பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் வருவதால் தனக்கு விழும் ஓட்டுகள் கூட குறைய வாய்ப்பிருப்பதாக அவர் நினைப்பதாகக்கூறப்படுகிறது. முத்தலாக் சட்டத்திற்கு அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்து பேசியதை திமுக பெரிய அளவில் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அதிமுக பாஜகவை தவிர்ப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.