
மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் துரை வைகோ, தான் வகித்து வரும் மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து நேற்று (19-04-25) திடீரென விலகுவதாக அறிவித்தார். கட்சித் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக ஒருவர் செய்து வருகிறார் என்று தனது அறிக்கையில் துரை வைகோ குறிப்பிட்டிருந்தார்.
துரை வைகோவின் இந்த விலகல் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. துரை வைகோ குறிப்பிட்ட ஒருவர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், மதிமுக சார்பில் இன்று (20-04-25) நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மதிமுகவின் அவைத் தலைமையில் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், மதிமுக கட்சியினுடைய 32வது ஆண்டு விழாவையொட்டி தொண்டர்கள் இல்லங்களில் கொடியேற்றுவது, பொதுக் கூட்டங்கள் நடத்துவது, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் ஆளுநர் ஆர். என்ரவியை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வக்ஃப் சட்டத்தை திரும்ப பெறக்கூடிய வகையில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் இணைந்து மதிமுக போராட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மான அறிக்கையில், முதன்மைச் செயலாளர் துரை வைகோ என்றே பெயரிட்டே வெளியிடப்பட்டுள்ளது.