
தமிழகத்தில் அடுத்த ஆண்டு 2026இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் வர இன்னும் 1 வருட காலம் இருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஆயுத்தமாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பிரிந்து கிடந்த அதிமுக -பா.ஜ.க கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மீண்டும் சேர்ந்திருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணியோடு போட்டியிட இருக்கிறது.
இந்த நிலையில், தி.மு.கவை மட்டுமே நம்பி இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். கட்சி தொண்டர்களுடன் முகநூல் நேரலையில் பேசிய திருமாவளவன், “ஏதோ நாம் திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் ஒரு தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சுத்திரம் இல்லை. எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதலான பேரம் பலிக்கிற இடத்திலே உறவை வைத்து கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது என்பது பெரிய ராஜதந்திரம் இல்லை.
அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத ஒரு அரசியல். நாம் அதை பொருட்படுத்தவில்லை, அதை ஈடுபாடு காட்டவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியிலே தொடர்கிறோம் என்றால் அதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். அதற்கு ஒரு தெளிவு வேண்டும். அதற்கு ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டும். இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாத புள்ளர்கள், அற்பர்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கிற வகையில் நமக்கு எதிரான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி, பிற அரசியல் கட்சிகள் போல் இல்லாமல் ஒரு முன்மாதிரியாக இயங்கக்கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது” எனத் தெரிவித்தார்.