
மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் துரை வைகோ, தான் வகித்து வரும் மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து நேற்று (19-04-25) திடீரென விலகுவதாக அறிவித்தார். கட்சித் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக ஒருவர் செய்து வருகிறார் என்று தனது அறிக்கையில் துரை வைகோ குறிப்பிட்டிருந்தார்.
துரை வைகோ குறிப்பிட்ட ஒருவர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று கூறப்படுகிறது. துரை வைகோவின் இந்த விலகல் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளமாக எப்போது இருப்பேன் என கட்சித் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்திருந்தார். இதையடுத்து, தனது நிலைப்பாட்டில் இருந்து விலகப் போவதில்லை என்றும், கட்சிக்குள் வீணாக குழப்பம் ஏற்படுத்தியது மல்லை சத்யா தான் என்றும் துரை வைகோ தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ம.தி.மு.க சார்பில் இன்று (20-04-25) நிர்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. மதிமுகவின் அவைத் தலைமையில் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான அறிக்கையில், முதன்மைச் செயலாளர் துரை வைகோ என்றே பெயரிட்டே வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தன்னை கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள் என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பேசிய கட்சி துணைப் பொதுசெயலாளர் மல்லை சத்யா, “துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என்று முதன் முதலில் கூறியது நான்தான். நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள். கடைசிவரை வைகோவின் தொண்டனாக இருந்துவிட்டுப் போகிறேன்” எனப் பேசினார்.