Skip to main content

'என் வலது பக்கத்தில் துரை வைகோ; இடது பக்கத்தில் மல்லை சத்யா'- வைகோ உருக்கம்

Published on 20/04/2025 | Edited on 20/04/2025
'On my right side is Durai Vaiko; on my left is Mallai Sathya' - Vaiko Urukkam

மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் துரை வைகோ, தான் வகித்து வரும் மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து நேற்று (19-04-25) திடீரென விலகுவதாக அறிவித்தார். கட்சித் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக ஒருவர் செய்து வருகிறார் என்று தனது அறிக்கையில் துரை வைகோ குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த அறிவிப்பு மதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

துரை வைகோ ஒருவர்என குறிப்பிட்து   கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை தான் மறைமுகமாக என்று கூறப்பட்டது. இதற்கிடையில், வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளமாக எப்போது இருப்பேன் என கட்சித் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்திருந்தார். இதையடுத்து, தனது நிலைப்பாட்டில் இருந்து விலகப் போவதில்லை என்றும், கட்சிக்குள் வீணாக குழப்பம் ஏற்படுத்தியது மல்லை சத்யா தான் என்றும் துரை வைகோ தெரிவித்தார்.

இப்படியான பல்வேறு சலசலப்புகளுக்கு இடையே ம.தி.மு.க சார்பில் இன்று (20-04-25) நிர்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. மதிமுகவின் அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான அறிக்கையில், முதன்மைச் செயலாளர் துரை வைகோ என்றே பெயரிட்டே வெளியிடப்பட்டிருந்தது. நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பேசிய கட்சி துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, “துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என்று முதன் முதலில் கூறியது நான்தான். நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள். கடைசிவரை வைகோவின் தொண்டனாக இருந்துவிட்டுப் போகிறேன்” எனப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். நடந்தவற்றை மறந்து ஒன்றாக இணைந்து கட்சிப்பணியாற்ற வேண்டும் என வைகோவும் வேண்டுதல் வைத்த நிலையில் இருவரும் சமாதானம் அடைந்துள்ளனர். இதனால் தன்னுடைய ராஜினாமா முடிவை துரை வைகோ திரும்ப பெற்றுள்ளார். கட்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவும், மல்லை சத்யாவும் அறிவித்துள்ளனர். இதன் மூலம் மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தான் எடுத்த முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றுள்ளார்.

'On my right side is Durai Vaiko; on my left is Mallai Sathya' - Vaiko Urukkam

இந்நிலையில் துரை வைகோ, மல்லை சத்யா ஆகியோருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், ''துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவும், முதன்மை செயலாளர் துரை வைகோவும் மனம்விட்டு பேசினார்கள்; உள்ளம் திறந்து பேசினார்கள். தங்களுடைய உணர்ச்சியின் வடிகாலாக வந்த சில வார்த்தைகள் எல்லாவற்றையும் மிக நாகரிகமாக இருவரும் கையாண்டார்கள். இதில் மல்லை சத்யா இனிமேல் இப்படிப்பட்ட பதிவுகள் வராது. அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படாது. அதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுப்பதில்லை என்று உறுதிமொழி கொடுத்து, ஆகவே இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் சகோதரர் துரை வைகோ என்று சொன்னதோடு, நான் இயக்கத்திற்கும் தலைமைக்கும் முதன்மைச் செயலாளருக்கும் பக்க பலமாக உறுதுணையாக இனி நான் உறுதியாக செயல்படுவேன் என்று சொன்னார். 

முதன்மைச் செயலாளர் துரை வைகோ அதனை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக இருந்து, இந்த இயக்கத்தை வலுப்படுத்துவோம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், நடந்தவைகள் நடந்து முடிந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும் என்று துரை வைகோ கூறினார். அதோடு மட்டுமல்லாது இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு கரம் குலுக்கி நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று  சமிக்கையை அதன் மூலம் வந்திருக்கும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்து பலத்த கர ஒலிக்கும் மத்தியில் எனது வலது பக்கத்தில் துரை வைகோவும் எனது இடது பக்கத்தில் மல்லை சத்யாவும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்'' என்றார்.

சார்ந்த செய்திகள்