கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் அதிமுக, பாஜக கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், “இது தொடர்பாக அதிகமான முறை தலைவர்கள் அவர்களது கருத்தை சொல்லிவிட்டனர். மாநிலத் தலைவரும் தேசியத் தலைமை தான் கூட்டணி குறித்து முடிவு செய்யும் என்கிறார். அவர் எங்கேயாவது மாற்றிப் பேசுகிறாரா. இதில் எங்கிருந்து குழப்பம் வந்தது. இன்றைய தேதியில் தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது என தேசிய தலைமையும் அறிவித்துள்ளது. மாநிலத் தலைவரும் அறிவித்துள்ளார். இதற்கு மேல் குழப்பம் எங்களிடம் இல்லை.
கலாஷேத்ராவில் மாணவிகள் அவர்களது அடையாளத்தை காப்பாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க வராததன் காரணம், புகார் கொடுத்த உடன் அவர்களது பெயர்களுக்கு பின் களங்கம் ஒன்றும் சேர்ந்து கொள்கிறது. சம்பந்தப்பட்ட மாணவிகள் தைரியமாக புகார் கொடுக்க வேண்டும் என சொல்லியிருந்தேன். புகார் கொடுத்துள்ளார்கள். நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
அவதூறு பேசினால் அதுகுறித்த வழக்கை யார் வேண்டுமானாலும் போடலாம். ராகுல் காந்தி விவகாரத்தில் பிரதமரை இழிவுபடுத்துவதாக நினைத்து குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துகிறார் என்பது தான் வழக்கின் சாராம்சம். விசாரணை முடிந்தபின் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்துள்ளது. பாஜகவிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டு வருடம் தண்டனை பெற்றால் வகிக்கும் பதவி பறிபோகும் என்பதையும் பாஜக சொல்லவில்லை. அது ஏற்கனவே இருக்கக்கூடிய சட்டம். சட்டம் தன் கடமையை செய்துகொண்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.