தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று (12/03/2021) தொடங்கியது. இதனால், வேட்பாளர் பட்டியல் ஒருபுறம் வெளியிட்டு வரும் தலைவர்கள், மற்றொரு புறம் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலத் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். அதன்படி, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் எஸ்.கே.பொன்னுத்தாய், கந்தர்வக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியில் எம்.சின்னத்துரை, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கே.சீனிவாசன், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் என்.பாண்டி, அரூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் ஏ.குமார், கீழ்வேளூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் நாகை மாலி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதைத் தொடர்ந்து பேசிய கே.பாலகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 6 வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்" என்றார்.
ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில், அ.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர். இதில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு, அ.ம.மு.க. சார்பில் டிடிவி.தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.சீனிவாசன் களம் காண்கிறார். அதேபோல், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாண்டி போட்டியிடுகிறார்.