பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்று பாஜக துணைத் தலைவர் எஸ்.கனகசபாபதி நம்பிக்கை தெரிவித்தார்.
மோடி அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க செய்தியாளர் சந்திப்பு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது, "எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை. ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக பேசுகிறார். வெளிநாடுகளில் நமது நாட்டுக்கு எதிராகவே பேசுகிறார். பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து கர்நாடகாவில் வெற்றி பெற்றார். அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது நீதிமன்றம் தான். அவரது பேச்சை மக்கள் நம்ப தயாராக இல்லை. கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பயணம் என்று கூறினார்கள். அது வறுமைக் கோட்டில் இருக்கும் பெண்களுக்கா அனைத்து பெண்களுக்கா என்று தெளிவுபடுத்தப்படவில்லை.
மாதந்தோறும் 200 யூனிட் இலவசம் மின்சாரம் என்றார்கள். இன்று யூனிட் கட்டணம் ரூபாய் 2.65 உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அவரது வாக்குறுதிகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை. பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் தனிநபர் வருமானம், தேசிய மொத்த உற்பத்தி உயர்ந்துள்ளது. கருப்பு பணம் குறைந்துள்ளது. வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. பிரதமர் எங்கே சென்றாலும் தமிழை உயர்த்திப் பேசுகிறார். நாடாளுமன்றத்தில் தமிழரின் பெருமையை உயர்த்த செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. நமது பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம் போற்றப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. காசி கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
உலகில் நடைபெறும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் 40% இந்தியாவில் நடைபெறுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா உயர்ந்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காப்போம் என்கிறார். ஆனால் ஊழல் நிறைந்த திராவிட மாடல் ஆட்சியில் இருந்து நாங்கள் தமிழகத்தை காப்போம் என்கிறோம். சமீபத்தில் கூட 25 பேர் விஷச் சாராயம் அருந்தி இறந்துவிட்டனர். ஆனால் முதலமைச்சர் துறை அமைச்சரிடம் அதுபற்றி விளக்கம் கேட்கவில்லை. மாறாக துறை அமைச்சர் சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனையை கண்டிக்கிறார். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் பெருகிவிட்டது. நேற்று முன்தினம் கூட விஷ்ணு பிரியா என்ற மாணவி தந்தையின் மது பழக்கத்தை கண்டித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா கிடைக்கிறது. சட்டவிரோத மதுபானக் கடைகள் இயங்குகின்றன. மேகதாது அணை திட்டத்தை தமிழக பாஜக எதிர்க்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.