ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக சார்பாக யாரு போட்டியிட்டாலும் நான் வெற்றி பெறுவேன். பாஜக போட்டியிட்டால் இன்னும் எளிமையாக வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது. அதிமுக என்பது ஒரு பெரிய கட்சி. எந்த ஒரு பாகுபாடுமின்றி காங்கிரஸ், திமுக வேட்பாளரை தோற்கடிக்கக்கூடிய வேட்பாளரை நிறுத்த வேண்டும். அவரது வெற்றிக்கான களத்தை உருவாக்கி கொடுப்பதுதான் எங்கள் நோக்கம். இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக இருந்தாலும், அவர் பேசிய பேச்சுக்களை மக்கள் கவனித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் ஏகப்பட்ட உட்கட்சி பிரச்சனைகள் இருக்கிறது. இடைத்தேர்தலில் ஈரோடு மாவட்ட தலைவரே அவரின் பின்னால் நிற்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றக் கட்சியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது” எனக் கேட்டிருக்கிறார்.