ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இடைத்தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்காக காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜக போன்ற கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து திமுக எம்.பி. ஆ.ராசா ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் ஒருவர் வெற்றி பெற்று தான் முதல்வராக நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இந்த தேர்தல்தான் நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்கிற தேர்தல். ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் சண்டை என்றால் அண்ணாமலை வந்து அதை தீர்த்து வைக்கிறார். எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி. கொள்கைகளில் ஆயிரம் கருத்து வேறுபாடு ஜெயலலிதாவிடம் எங்களுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசிடம் ஒரு போதும் அவர் கையேந்தியது இல்லை. அதனால்தான் கலைஞரிடம் ஜெயலலிதா குறித்து கேட்டபோது ‘ஜெயலலிதாவின் துணிச்சல் பிடிக்கும்’ என சொன்னார்.
அம்மா... அம்மா என 1000 தடவை சொல்கிறார்கள். அவரின் துணிச்சல் கொஞ்சமாவது உள்ளதா. உங்களுக்கு பஞ்சாயத்து செய்யதான் அண்ணாமலை இருக்கிறார். எங்களை எதிர்க்க திராணியில்லாதவர்கள் திமுக என எடப்பாடி சொல்கிறார். எடப்பாடி மோடிக்கு பயப்படுகிறார். நாடாளுமன்றத்தில் அதானி பிரச்சனை குறித்து பேசும்போது, ‘என்னை சந்தேகிக்கிறீர்கள்; நான் 140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள பிரதமர். எங்களை அசைக்க முடியாது’ என சொல்கிறார் மோடி. அவரைப் பார்த்து நான் கேட்டேன், மோடிக்கு ஓட்டு போட்டது 310 எம்.பி. மீதமுள்ள 220 எம்.பி. எங்கள் கட்சியில் உள்ளனர். உங்களை எதிர்த்து நாங்கள் வாக்களித்துள்ளோம். 80 கோடி பேர் உங்களை எதிர்த்துக்கொண்டு உள்ளோம். 140 கோடிக்கு ஜவாப்தாரி என சொல்வதற்கு கூசவில்லையா எனக் கேட்டேன்” எனக் கூறினார்.