டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது போலிசார் நடத்திய தாக்குதலை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச் செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி பங்கேற்ற இப்போராட்டம் இரண்டு மணி நேரம் நடந்தது.
மஜக விவசாய அணியினர் தேசிய கொடியும், மஜக கொடியும் கட்டப்பட்ட டிராக்டருடன் வந்து சாலையை மறித்தனர். சற்று நேரத்தில் மூன்று திசைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்கள் சாலையோரம் திரண்டு வந்து வேடிக்கை பார்க்க அப்பகுதி பரபரப்பானது. மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராகவும், அரச வன்முறைகளை கண்டித்தும், விவசாயிகளுக்கு வாழ்த்து கூறியும் எழுப்பப்பட்ட முழக்கங்கள் ECR சாலையை அலற வைத்தது.
தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த மு.தமிமுன் அன்சாரி, பிரதமர் மோடியின் பிடிவாத போக்கை கண்டித்தார். மேலும் பேசிய அவர், விவசாயிகளின் போராட்ட உணர்வுகளை மதித்து சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும். அமைதியாக அணிவகுத்த விவசாயிகளின் பேரணியில் ஊடுறுவி கலகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பிறகு காவல்துறையினர் கைது செய்யாததால் அனைவரும் கலைந்து சென்றனர்.