Skip to main content

ஆளும் கட்சியினருடன் கைகோர்த்து விடாதீர்கள்: தலைமைக்கு விசுவாசமாக இருங்கள்: மு.க.ஸ்டாலின்

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

 

தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய உறுப்பினர்கள், கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாநாடு வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. 
 

இதில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்,
 

உள்ளாட்சி அமைப்பு என்றால் எனக்கு எப்போதுமே அதிக மகிழ்ச்சி தான். ஏனென்றால் நானும் உள்ளாட்சி அமைப்பில் இருந்து வந்தவன் தான். சென்னை மாநகராட்சி தேர்தலில் இரண்டு முறை மக்களால் நேரடியாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க பல இடங்களில் பாலங்கள் கட்டினேன். காலை முதல் இரவு வரை நடந்தே சென்று மக்களை நேரடியாக சந்தித்து சிறப்பாக பணியாற்றினேன்.

 

dmk



இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் பணியானது நமக்கு வாக்களித்த மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தாத வகையிலும், வாக்களிக்காத மக்களுக்கு நாம் இவருக்கு வாக்களிக்காமல் தவறு செய்து விட்டோமே என்று வருத்தப்படும் அளவில் உங்களது பணி இருக்கவேண்டும். மக்கள் சொல்வதை செய்கிறோமோ இல்லையோ? அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். மக்கள் பணியை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பகுதியை தி.மு.க. கோட்டையாக மாற்றிக்காட்ட முடியும்.
 

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக கையேடு வழங்கப்பட்டு உள்ளது. இந்த கையேட்டில் உள்ள விதிமுறைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள். கிராம சபை கூட்டங்களில் அனைத்து தரப்பு மக்களையும் பேச வையுங்கள். உள்ளூர் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அவற்றை தீர்த்து வைக்க தீர்மானம் நிறைவேற்றுங்கள். உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் மீது உடனே நடவடிக்கை எடுங்கள்.


 

பஞ்சாயத்து தலைவர்களுக்கு ‘செக்’கில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது என்று துரைமுருகன் குறிப்பிட்டார். இது தொடர்பாக நாங்கள் புகார் செய்து இருக்கிறோம். மக்கள் மன்றத்திலும் எடுத்து சொல்வோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்திற்கும் செல்வோம். எந்த பிரச்சினை என்றாலும் நேரடியாக சென்று ஆய்வு செய்யுங்கள்.
 

பெண்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், வாய்க்கால், கண்மாய் பராமரிப்பது போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். பொது கழிப்பறை, தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு முக்கிய சாலை சந்திப்புகளில் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும்.


 

டெண்டர் விடுவதில் தான் கெட்ட பெயர் ஏற்படும். எனவே அதில் முழு கவனம் செலுத்த வேண்டும். சட்ட விரோத செயல்களுக்கும், ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் இடம் கொடுத்து விடாதீர்கள். வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். அடுத்து நான் (ஸ்டாலின்) தான் முதல் -அமைச்சர் என்றெல்லாம் இங்கே பேசினார்கள். நீங்கள் சிறப்பாக மக்கள் பணியாற்றினால் தான் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியில் அமர முடியும். எனவே அமைதியாக நடந்து தி.மு.க.வுக்கு ஒரு நற்பெயரை ஈட்டித்தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
 

ஆளும் கட்சியினர் உங்களை சுதந்திரமாக செயல்பட விடமாட்டார்கள். உனக்கு பாதி எனக்கு பாதி என கூறி உங்களை மாட்டி விட பார்ப்பார்கள். எனவே ஆளும் கட்சியினருடன் கைகோர்த்து விடாதீர்கள். கட்சி தலைமைக்கும், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் விசுவாசமாக இருங்கள் என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்