அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நேற்று (17.10.2021) விழுப்புரத்தில் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய சி.வி. சண்முகம், “அனைத்து தரப்பு மக்களுக்குமான இயக்கமாக எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக. அவர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் அளப்பரிய தியாகத்தால் தற்போதுவரை மக்களின் சக்தியைப் பெற்றுள்ள கட்சி அதிமுக.
இந்த இயக்கம் 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நேரத்தில், அதிமுக என்ற இந்த மாபெரும் இயக்கம் பல வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளது. அரசியல் வரலாற்றில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். 2021 தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது. அதேபோல் கடந்த 1996ஆம் ஆண்டு சந்தித்த தேர்தலில் அதிமுக படுதோல்வியைத் தழுவியது. ஆனால், மீண்டும் எழுந்து வந்த பெருமை நமது கட்சிக்கும் மறைந்த ஜெயலலிதாவுக்கும், இயக்கத்தில் உள்ள நமது தொண்டர்களுக்கும் சேரும். இந்த தோல்வி நிரந்தரம் இல்லை.
இந்த இயக்கம் பல எதிரிகளை, துரோகிகளை சந்தித்துள்ளது. அவர்களை வீழ்த்திவிட்டு வந்துள்ளது. எம்.ஜி.ஆருக்கு துணையாக இருந்த நாஞ்சில் ராஜேந்திரன், எஸ்.டி. சோமசுந்தரம், ஆர்.எம். வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன்... இப்படி மக்களால் போற்றப்பட்டவர்களே கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுச் சென்றனர். ஆனால், அப்படிப்பட்டவர்கள் மீண்டும் ஜெயலலிதாவிடம் சரணடைந்தனர். இவர்களைவிட இன்று சில துரோகிகள் அதிமுகவே நாங்கள்தான் என கூறுகின்றனர். இதை நாங்கள் ஏற்க மாட்டோம்; தொண்டர்கள் ஒருபோதும் அதனை ஏற்க மாட்டார்கள். எத்தனை சசிகலா வந்தாலும் இந்த மாபெரும் அதிமுக என்ற இயக்கத்தை துளிகூட அசைத்துப் பார்க்க முடியாது.
சசிகலாவால் தோற்றுவிக்கப்பட்ட அமமுகவையே இவர்களால் நிலைநிறுத்த முடியவில்லை. இந்த நிலையில், அதிமுகவைக் காப்பாற்றப் போவதாகக் கூறிவருகிறார்கள். நீங்கள் என்ன வேஷம் போட்டாலும் அதிமுக தொண்டர்கள் இனிமேல் அதிமுக தொண்டர்கள்தான். உங்களிடம் ஏமாற மாட்டார்கள். அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை. எனவே, இன்று நாம் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். எதிரிகள், துரோகிகளுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். மறைந்த ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேறும் வகையில் அடுத்து வர இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும். அதற்கு தொண்டர்களும் கட்சி முன்னோடிகளும் முழு மூச்சாக செயல்பட வேண்டும்” என ஆவேசமாகப் பேசினார். நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.