Published on 06/02/2020 | Edited on 06/02/2020
"அமைச்சர்கள் பேச்சினால் எடப்பாடிக்கும் தன் ஆட்சியின் நிலைத்தன்மை மீது சந்தேகம் வந்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச் சூழல்துறை ’அமைச்சர் கருப்பணன், ஊராக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு குறைவாகத்தான் நிதி ஒதுக்குவோம் என்று கூறியதை கவர்னரிடம் புகாராக கொடுத்து, பதவியைப் பறிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன். தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஹிந்துக்களின் ஓட்டு என்றால் தி.மு.க.வுக்கு இனிக்கிறது. அவர்களின் உயிர் என்றால் கசக்குதா? இஸ்லாமியத் தீவிரவாதம் தொடர்ந்தால் இந்துத் தீவிரவாதமும் அதிகரிக்கும். பதிலுக்கு இந்துக்கள் தாக்குவார்கள் என்று அதிர்ச்சியூட்டினார்.
இப்படி ஒரு அமைச்சரே, மதக் கலவரத்துக்கு வித்திடும் வகையில் பேசலாமா என்று மு.க.ஸ்டாலின் கண்டித்திருக்கும் நிலையில், தொடர்ந்து வில்லங்கமாகப் பேசும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று 3-ந் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகனும் மா.சுப்ரமணியனும் கவர்னரிடம் புகார்மனு கொடுத்திருக்கிறார்கள். ராஜேந்திர பாலாஜியோ, எடப்பாடிக்குத் தெரிந்துதான் நான் பேசுகிறேன். அவர் அனுமதி இல்லாமல் பேசுவேனா? எதிர்க்கட்சிகளுக்கு என் பாணியில் பதில் சொல்வது எப்படி தவறாகும்னு கேட்கிறார் என்று கூறுகின்றனர்.