9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில், வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். வரும் 22ஆம் தேதி ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவியை பிடிப்பதில் திமுகவினர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த ஒன்றியத்தில் மொத்தம் 26 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் திமுக 18, விசிக 1, அதிமுக 3, பாமக 2, சுயேச்சைகள் 3 என ஒன்றியக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளது.
அதனால், திமுக இந்த ஒன்றியத்தில் மிக பலமாக உள்ளது. அதன் காரணமாக கட்சியின் ஒன்றிய குழுவினர் ஆதரவோடு சேர்மன் பதவியை பிடிக்க திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. இதில் மரக்காணம் மேற்கு ஒ.செ. பழனி, கிழக்கு ஒ.செ. தயாளன், மத்திய பகுதி கண்ணன் ஆகிய மூன்று பேரும் சேர்மன் பதவிக்கு முட்டி மோதுவதாக கூறப்படுகிறது. இதற்காக கட்சித் தலைமை வரையும் சிபாரிசுக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், நகரச் செயலாளர் பாரத் குமார் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இப்படி பரபரப்பான சூழ்நிலையில் மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவியை யாருக்கு கொடுப்பது என்பது குறித்து நேற்று மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செஞ்சி மஸ்தான் மரக்காணம் சென்று வெற்றி பெற்ற திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.