திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள குணசீலத்தில் பெரம்பலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவாக நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.
குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோவில் முன்பாக தொடங்கிய பிரச்சார பயணத்திற்கு முசிறி தொகுதி எம்.எல்.ஏ.வும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,காங்கிரஸ் திருச்சி மாவட்ட தலைவர் திருச்சி கலை, திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குணசீலம் ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு பேசும்போது, “வருகின்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். மீண்டும் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால் இனி இந்தியாவில் தேர்தலே இருக்காது என்ற வகையில் அவருடைய நடவடிக்கை உள்ளது. வாரந்தோறும், மாதம் தோறும் தமிழ்நாட்டு வருகின்ற பிரதமர் எந்த விதமான நிதியும் தமிழ்நாட்டுக்கு தருவதில்லை. வெள்ளம் வந்தாலும் நிதி தருவது இல்லை. தமிழக அரசின் செலவிற்கு மத்திய அரசில் இருந்து நிதி தருவதில்லை என்ற அளவில் தமிழக அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் பணியில் மோடி ஈடுபட்டு வருகிறார்.
ஒன்றிய அரசுக்கு தமிழகத்தில் இருந்து அதிகமான வரி வசூல் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு ரூபாய் கட்டினால் 29 பைசா மட்டுமே கொடுத்து நிதி நிலைமையை கெடுக்கின்றனர். அதனால் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கான மக்கள் கூடி உரையை கேட்கின்றனர். ஒன்றிய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது.
ஒரு ரூபாய் கூட பணம் கட்டாத பீகாருக்கு ஒரு ரூபாய் கட்டினால் நான்கு ரூபாய் திருப்பி தருகின்றனர். மத்திய பிரதேசத்திற்கு இரண்டு ரூபாய் 59 காசுகள் கொடுக்கின்றனர். நமக்கு 29 காசு தான் தருகின்றனர். இது தமிழகத்தை வஞ்சிக்கின்ற செயல் அல்லவா? தமிழகம் வளர்ச்சி பெற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணி வெற்றிபெற நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக அருண் நேரு போட்டியிடுகிறார். அவருக்கு இப்பகுதியைச் சேர்ந்த பெரியோர்களும், வாக்காளர்களும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவருக்கு உங்கள் பேராதரவை தர வேண்டும்.
இதே தொகுதியில் வெற்றி பெற்ற செல்வராஜ் அமைச்சராக இருந்துள்ளார். நாங்களும் அமைச்சராக இருந்து இப் பகுதி மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட பணிகளை செய்துள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளில் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் தமிழக அரசின் சார்பாக திருச்சிக்கு வந்துள்ளது. இப்பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற நீங்கள் அருண் நேருவை ஆதரிக்க வேண்டும். படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு மணப்பாறை பகுதியில் உணவு பூங்கா அமைய உள்ளது. படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெரும் வகையில் பேருந்து நிலையம் அருகே ஐடி பார்க் அமைத்திட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாதந்தோறும் உதவி தொகை ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு செல்கிறது. முதியோர் உதவி தொகை 38 லட்சம் பேருக்கு செல்லுகிறது. இன்னும் எஞ்சி இருக்கிற ஒரு கோடி 60 லட்சம் பெண்களுக்கு இல்லை என்று சொல்லாத அளவுக்கு மாதம் ஆயிரம் தருகிறேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். எனவே தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உங்களுடைய நல்லதரவை தர வேண்டும்” என்று கே. என். நேரு பேசினார்.
அதனைத் தொடர்ந்து வேட்பாளர் அருண் நேரு அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் பேசி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.அப்போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.