ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன். சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா சிறைக்கு சென்றதால், அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி தரப்பினர் பூங்குன்றனை கண்டுகொள்ளவில்லை. பூங்குன்றனும் எந்த வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் அமைதியாக இருந்தார்.
எடப்பாடியின் நோக்கத்தை அறிந்திருந்த அமைச்சர்களும், பூங்குன்றன் உள்ளிட்ட சசிகலா சொந்தங்களிடம் நட்பு பாராட்டாமல் இருந்தனர். அதேபோல, பூங்குன்றனும் அமைச்சர்களை சந்திப்பதோ, அதிமுக நிகழ்வுகளில் கலந்து கொள்வதோ இல்லை.
இந்நிலையில், தைப்பூசம் பெரு நிகழ்வை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூரில் இருக்கும் வள்ளலார் கோவிலுக்கு சென்றார் பூங்குன்றன். அங்கு சுமார் 2 மணி நேரம் இருந்தார். அப்போது, அமைச்சர் சம்பத்தும் அங்கு வந்தார். இருவரும் இணைந்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.
இது குறித்த செய்தி பரவி விடாமல் தடுத்துள்ளார் அமைச்சர் சம்பத். ஆனால், இதனை மோப்பம் பிடித்து விட்ட உளவுத்துறை, அவர்கள் இருவரின் சந்திப்பு எதேச்சையானதா? அல்லது திட்டமிடப்பட்டதா? எதேச்சையான சந்திப்பாக இருந்தால் என்ன பேசிக்கொண்டார்கள் ? திட்டமிடப்பட்ட சந்திப்பு என்றால் திட்டமிடலின் நோக்கம் என்ன? என்றெல்லாம் விசாரிக்கிறதாம் உளவுத்துறை.