பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளிவந்த சசிகலாவை, அதிமுக கட்சியியைச் சேர்ந்த பலர் பல்வேறு பகுதிகளில் அவரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
அதேபோல் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதில் ஆண்டிபட்டி பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர், அரசியல் சூடுபிடித்துள்ளது. சசிகலாவை வரவேற்று ஆண்டிபட்டியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதிமுக நிர்வாகி போஸ்டர் ஒட்டினார். அதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கியது அதிமுக தலைமை.
‘கட்சியில் இருந்து நீக்கம் செய்தாலும் பரவாயில்லை நாங்கள் போஸ்டர் ஒட்டதான் செய்வோம்’ என்று அதிமுக கட்சியின் பெரியகுளம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அம்மா பேரவை அவைத் தலைவர் வைகை சாந்தகுமார் என்பவர் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டிவந்தார். அவரும் அதிமுக கட்சியில் இருந்து நேற்று (02.02.2021) நீக்கப்பட்டார்.
இந்நிலையில் சசிகலாவை வரவேற்று அவர் ஒட்டிய போஸ்டர்கள் மீது அதிமுக கட்சியின் ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞர் பாசறை தலைவர் பாரத் தலைமையில், தேனி எம்.பி. ரவீந்திரநாத்தின் பிறந்தநாள் போஸ்டர்களை ஒட்டினர். அதுவும் வைகை. சாந்தகுமார் ஒட்டிய போஸ்டர்கள் மீது ரவீந்திரநாத் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டது.
இதனைப் பார்த்த அமமுக நிர்வாகி, போஸ்டர் ஒட்டிய அதிமுக கட்சிக்காரர்களிடம் நள்ளிரவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த வாக்குவாதம் முற்றியதால் போலீசாரும் குவிந்தனர். நேற்று இரவு 11 மணியளவில் தேனி - மதுரை நெடுஞ்சாலையில் போஸ்டர் ஒட்டுவதில் தகராறு ஏற்பட்டது. போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால், அதிமுக கட்சியினர், போலீசார் அமமுக கட்சிக்கு ஆதராவாக செயல்படுகிறது என்று தெரிவித்தவுடன் போலீசாரும் பின் வாங்கினர். பின்னர் சிசிகலாவை வரவேற்ற போஸ்டர் மேலேயே ரவீந்திரநாத் பிறந்தநாள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதேபோல் ஆண்டிபட்டி நகரில் சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள அனைத்து போஸ்டர்களின் மீதும் ரவீந்திரநாத் பிறந்தநாள் போஸ்டர் ஒட்டப்பட்டது. போஸ்டர் அரசியலால் ஆண்டிபட்டி பரபரப்பாகவே உள்ளது.