திருச்சி விமான நிலையத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது அவர் பேசுகையில், "கடந்த 2007ம் ஆண்டு திருச்செந்தூரில் 5,309 மாடுகள் மாயமான விவகாரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது ஆகும். அதற்கும் தற்போதைய திமுக ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுகுறித்து நேற்று முன்தினமே நான் விளக்கமாக பதில் அளித்துவிட்டேன். இதுகுறித்து அண்ணாமலை தேவையில்லாமல் 'அரசியல் ஸ்டண்ட்' அடிக்கிறார். திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப் கார் அமைக்கும் திட்டத்தின் கீழ் போதுமான இடமில்லாததால் தற்போது அந்த திட்டம் சாத்தியமில்லாததாக இருக்கிறது. அதற்கு மாற்றாக லிப்ட் அமைக்கலாமா? என்ற ஒரு மாற்றுத் திட்டத்தையும் பரிசீலனை செய்து வருகிறோம்.
பழனி திருக்கோயில் கும்பாபிஷேகத்துக்காக 47 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 6000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும். அந்த அளவிற்கு தான் கோவிலில் இடம் இருக்கிறது. இதில் 2,000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும், ஆகம விதிப்படி தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பழனி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனக்கோ, எனது உறவினருக்கோ சென்னை துறைமுகத்தில் இடம் இருக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை நிரூபிக்கத் தயாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.