சாயக்கழிவு நீர் வெளியேற்ற அமைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றக்கோரி பவானி மக்கள் ஈரோடு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காடையம்பட்டி பகுதிகளில் நூற்றுக்கனக்கான சாய, சலவைப்பட்டறைகள் இருக்கிறது. இங்கு இயங்கும் சாய, சலவைப் பட்டறைகளின் ஒட்டு மொத்த கழிவு நீர் குழாய்கள் மூலம் அங்கே போகும் சாக்கடைகளில் அப்படியே கலக்குகிறார்கள். அந்த நீர் நேராக பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால் பவானி ஆற்று நீர் மக்கள் குடிநீருக்கு பயன்படுத்த முடியாமல் நீராக உள்ளது. இதை நிறுத்த பொதுமக்கள் போராடியும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மக்கள் மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் கூறிய போது "சட்டவிரோதமாக பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்" என்றனர். மேலும் பெண்கள் ஆவேசமாக ''நீர் நிலைகளை பாதுகாக்கத்தான் அரசு மாசு கட்டுப்பாடு துறையை ஏற்படுத்தி, அதற்கென ஒரு அமைச்சரையும் செயல்படுத்தி வருகிறது. அந்த அமைச்சர் இதே பவானியைச் சேர்ந்த கருப்பணன்தான். சாய, சலவைப் பட்டறை அதிபர்களிடம் போய் 'கை' குலுக்கிக் கொண்டு ஆற்று நீரை விஷ நீராய் மாற்றி மக்களுக்கு நோய் நொடிகளை கொடுக்கிறார். இந்த அமைச்சர் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு அமைச்சரில்லீங்க சுற்றுச்சூழல் கேடு, மாசு கெட்டுப்பாடு அமைச்சருங்க" என்றனர் கோபமாய்.