நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளுக்குப் பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதே இல்லை என்று நாடாளுமன்றத்தில் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்துப்பேசிய திமுகவின் மூத்த திமுக எம்.பி.க்களில் ஒருவரான திருச்சி சிவா, "பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருகிறார். நாடாளுமன்றத்திலிருக்கும் அவரது அலுவலகத்திற்கு செல்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தின் உள்ளே அவைக்கு வருவதில்லை. விவாதத்திற்கு தயாராக இல்லை. விவாதத்தில் கலந்துகொள்வதும் இல்லை.
எம்.பி.க்கள் கேள்வி கேட்டால் எழுந்து பதில் சொல்லும் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார். அந்த பக்கமே எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. இவர்கள் விவாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். When power increases, responsibility increases என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மணிப்பூர் கலவரம், அதானி மேல் அமெரிக்காவின் குற்றச்சாட்டு, உத்திர பிரதேசத்தில் சம்பல் பகுதியில் தொடரும் இரு பிரிவினருக்கிடையிலான மோதல்கள் என நாங்கள் எந்த விவாதத்தை தொடங்கினாலும் அதைப் பேச அவைத் தலைவர் அனுமதி தருவதில்லை.
அனுமதி மறுப்பதுடன் அவையையும் ஒத்தி வைத்து விடுகிறார். அதானி விசயத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது. அதானி பேச்சை எடுத்தாலே அனுமதி மறுக்கப்படுகிறது " என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.