புதுச்சேரி மாநிலத்தில் மேல்பிரிவு எழுத்தர் பணிக்கு செல்வராணி என்பவர் விண்ணப்பித்திருந்தார். செல்வராணியின் தந்தை இந்து மதத்தைச் சேர்ந்தவர், தாய் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், தன்னை ஒரு இந்து என்று குறிப்பிட்டு, எஸ்.சி சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில், கிராம நிர்வாக அதிகாரி மேற்கொண்ட விசாரணையில் செல்வராணியின் தந்தை உள்பட அனைவரும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறியுள்ளனர் என்பது தெரியவந்தது. அதனால், செல்வராணிக்கு எஸ்.சி சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அதிகாரி மறுத்துவிட்டார்.
இதனையடுத்து, தான் சிறு வயதில் இருந்தே இந்து மதத்தை பின்பற்றியதாகவும், கிறிஸ்துவ மதத்துக்கு மாறினாலும் அதன் பின்னர் இந்து மதத்துக்கு மாறிவிட்டதாகவும் செல்வராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம், ‘செல்வராணி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்து மதத்துக்கு மறுமதமாற்றம் செய்தது தொடர்பான எந்தவித ஆதாரத்தை வழங்கவில்லை. அதனால், செல்வராணிக்கு எஸ்.சி சான்றிதழ் வழங்க முடியாது’ என்று கூறி தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து, செல்வராணி இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வு முன்பு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி ஒவ்வொரு குடிமகனுக்கும் தங்களுக்கு விருப்பமான ஒரு மதத்தை கடைப்பிடிப்பதற்கும் பின்பற்றுவதற்கும் உரிமை உள்ளது. ஒருவர் அதன் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் ஆன்மீக சிந்தனைகளால் உண்மையாக ஈர்க்கப்பட்டால், அவர் வேறு மதத்திற்கு மாறுகிறார். இருப்பினும், மதமாற்றத்தின் நோக்கம் இடஒதுக்கீட்டின் பலனைப் பெறுவதே தவிர, பிற மதத்தின் மீது உண்மையான நம்பிக்கை இல்லாமல் இருந்தால், அதை அனுமதிக்க முடியாது. ஏனெனில் இத்தகைய உள்நோக்கம் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சமூக நெறிமுறைகளை தோற்கடிக்கும்.
செல்வராணி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றும், தவறாமல் தேவாலயத்திற்குச் சென்று வந்துள்ளார் என்றும் ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. இருந்தபோதிலும், அவர் தன்னை ஒரு இந்து என்று கூறிக்கொண்டு, வேலைவாய்ப்பின் நோக்கத்திற்காக பட்டியல் சாதி சமூகச் சான்றிதழை நாடுகிறார். அவரால் செய்யப்பட்ட இத்தகைய இரட்டைக் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது. ஞானஸ்நானம் பெற்ற பிறகு அவர் தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. எனவே, மதப்படி கிறிஸ்தவராக இருந்தாலும், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காக மட்டுமே இந்து மதத்தைத் தழுவுவதாகக் கூறும் செல்வராணிக்கு எஸ்.சி சான்றிதழ் வழங்குவது என்பது இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்கு எதிரானது. மேலும் இது, அரசியலமைப்புக்கு மீதான மோசடி ஆகும்’ என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், செல்வராணிக்கு எஸ்.சி சான்றிதழ் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு சரியானது தான் என்று கூறி செல்வராணியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.