
பாமக நிறுவனர் ராமதாஸ் மட்டும் முதல்வரை நிந்தித்து பேசலாமா என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுவையில், ''மணிப்பூர் கலவரம் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சற்றேறக்குறைய 250 உயிர்கள் இதில் பலியாகி இருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். வீடுகள் சேதமடைந்துள்ளது. ஏற்பட்டிருக்கின்ற சேதங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இன்னும் அந்த கலவரம் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் அரசாங்கம் அதை தடுத்து நிறுத்துவதற்கும், அங்கு சகஜ நிலை திரும்பவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எதுவுமே எடுக்கவில்லை. இந்த நாட்டின் ஒரு பகுதியில் வாழ்கின்ற மலைவாழ் பகுதி மக்கள் இந்த அளவிற்கு தங்களுடைய நிம்மதியான வாழ்வு குலைந்து வாழும்போது பொறுப்பற்ற நிலையில் ஒரு அரசாங்கம் இருக்கிறது. இங்கே ஆளுகின்ற இதே பாஜகதான் அரசு தான் அங்கேயும் (மணிப்பூரிலும்) ஆண்டு கொண்டிருக்கிறது. இது குறித்து பிரதமர் வாய் திறக்கவில்லை. உள்துறை அமைச்சர் எந்த அறிக்கையும் தரவில்லை. இது குறித்து பேசலாம் என்று நாங்கள் முயன்றால் கூட அதற்கு அனுமதி தருவதில்லை. ஒன்று அவர்களாக பேச முன்வர வேண்டும் அல்லது பேச வேண்டும் என்று சொல்கின்ற பொழுது பேச அனுமதிக்க வேண்டும். நாடாளுமன்றம் என்பது கருத்துக்களை பகிரவும் உணர்வுகளை எடுத்து வைக்கவும் கருத்து பரிமாற்றத்திற்கு பின்னால் தீர்வு காண்பதற்காகவும் ஜனநாயக அமைப்புக்கான மிகப்பெரிய மன்றம். அங்கே பேச அனுமதியில்லை.
அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை அல்லது இருக்கிறது என்பதை அரசாங்கம் ஒரு விவாதத்தின் மூலம் பதில் சொல்லலாம். எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் சொல்வது அவர்களுடைய பணி என்பதை விட சூழ்நிலையை குறித்து கருத்துக்களை சொல்கின்ற பொழுது அதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. நிதானமாக செயல்பட வேண்டிய அரசாங்கம், எதிர்க்கட்சிகள் வைக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மறுக்கிறார்கள்'' என்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை குறித்து முதல்வர் பதிலளிக்கையில் 'அவருக்கு வேறு வேலை இல்லை' என்று கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''ஒரு முறை ராமதாஸ் என் தகுதிக்கு நான் போய் அவரை (மு.க.ஸ்டாலினை) சந்திப்பதா என்றெல்லாம் முதல்வரை பற்றி பேசியுள்ளார். அது ரொம்ப நியாயமா? முதல்வராக யாராக இருந்தாலும் அப்படி சொல்லலாமா? அதற்கு பதில் சொல்லட்டும். முதல்வர் சொன்னது ஒரு கருத்து அவ்வளவுதான். அதற்கு இவ்வளவு ஆவேசப்படும் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். கட்சித் தலைவர் என்பதைவிட இந்த தமிழகத்தின் முதல்வர் அவர். எல்லோருக்கும் அவர்தான் முதல்வர். நாங்கள் பிரதமரை பற்றி பேசும் போது மரியாதையா தான் பேசுகிறோம். மாநிலத்திற்கு ஏதேனும் தேவை என்றால் அவரை தேடித்தான் போகிறோம். காரணம் அதிகாரமும் பொறுப்பும் அவரிடம் இருக்கிறது. அது போல தான் முதல்வர். முதல்வரை நிந்தித்து பேசுவார்களாம். ஆனால் முதல்வர் இவர்களை ஒரு வார்த்தை கூட சொல்லக்கூடாது என்று சொன்னால் அது என்ன விசித்திரம்'' என்றார்.