மத்திய அரசால் கடந்த செப்டம்பர் 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம். நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு விரிவான உதவிகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட மத்திய அரசின் முன் முயற்சி திட்டம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் இந்து கடவுளான விஸ்வகர்மாவின் நினைவாக இந்த திட்டத்திற்கு 'பிரதமரின் விஸ்வர்கமா யோஜனா' என பெயரிடப்பட்டது.
இந்நிலையில் 'விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது' என தமிழக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு தமிழக முதல்வர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான தொழில் முறையை வெளிப்படுத்துகிறது. எனவே பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது. விஸ்வகர்மா திட்டத்தை ஆராய தமிழ்நாடு அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு விரிவான ஆய்வு செய்யப்பட்டது. திட்டத்தில் மாற்றம் செய்திட மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அதனை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் மத்திய அரசு அளித்த பதிலில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் குறிப்பிடப்படவில்லை. எனவே தமிழ்நாட்டுக்கென விரிவான திட்டம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சமூக நீதி அடிப்படையில் சாதி பாகுபாடு இல்லாமல் கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புது திட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.