அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடுகிறது தமிழக பாஜக! போட்டியிடும் 20 வேட்பாளர்களில் பலருக்கு எப்படி சீட் கிடைத்தது என கனமான புகார்கள் டெல்லிக்குப் பறந்துகொண்டிருக்கின்றன. புகார்களைப் பார்த்து கட்சியின் தேசிய தலைமை அதிர்ச்சியடைந்திருக்கிறது.
“தேர்தல் முடியட்டும், அப்போது தெரியும் எங்களின் அக்னிப் பார்வை” என இப்போதே பற்களைக் கடிக்கிறதாம் டெல்லி. இதற்கிடையே, பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளின் நிலவரங்கள் எப்படி இருக்கிறது என்று மத்திய உளவுத்துறையிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறது டெல்லி.
கடந்த ஒரு வாரத்தில் 20 தொகுதிகளையும் இருமுறை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் உளவு ஆட்கள். ஒரு தொகுதியில் கூட பாசிட்டிவ் ரிசல்ட் வரவில்லையாம். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உளவுத்துறை, ரிப்போர்ட்டை அனுப்பலாமா? வேண்டாமா? என யோசித்ததாம். இது தொடர்பாக நடந்த விவாதத்தில், நமக்கு எதற்கு வம்பு? என்ன ரிசல்ட் வந்ததோ அதனை அனுப்பி வைத்துவிடுவோம் என முடிவெடுத்து, உண்மையான ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஓரிடத்தில் கூட தாமரை மலராது என்கிற ரிப்போர்ட்டை பார்த்து தேசியத் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மோடியும் அமித்ஷாவும் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும்போது, தமிழக தலைவர்களுக்கு டோஸ் இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்த டெல்லி சோர்ஸ்கள்.