




ஆயிரம் விளக்கு தொகுதியில் மாடல் பள்ளி சாலையில், வீடு வீடாகச் சென்று குஷ்பு வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களிடம் ‘மறக்காமல் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி அடையச் செய்யவேண்டும்’ என்று குஷ்பு கேட்டார். உடனே அங்கிருந்த பெண்கள் அவரை சூழ்ந்துகொண்டு “கரோனா நேரத்துல சோத்துக்கு கூட வழியில்லாம பசியும் பட்டினியுமாகக் கெடந்தோம். அப்பல்லாம் நீங்க எங்க போயிருந்தீங்க? இந்த தொகுதியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இங்க பாருங்க பக்கத்துல எல்லாம் சுகாதாரம் இல்லாம கழிவுநீர் வெளியேறி சாக்கடையா கெடக்கு. சாலைய சுத்தம் செய்ய ஆட்கள் இல்லை. நாங்க இந்த நாத்தத்துல தான் வாழ்ந்துட்டு இருக்கோம். தண்ணீர் பற்றாக்குறை இருக்கு. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? நீங்க வந்து என்னத்த செய்யப் போறீங்க” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு குஷ்பு, “கோபப்படாதீங்கமா கரோனா காலத்திலே நான் எங்க பகுதியில இருக்கிற மக்களுக்குத் தினமும் சாப்பாடு செஞ்சு போட்டேன். உங்களுக்குத் தெரியாது. எங்க பகுதி மக்களிடம் வந்து கேளுங்க. நிறைய உதவி செஞ்சிருக்கேன். இந்த முறை எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன். மறக்காம தாமரை சின்னத்திற்கு ஓட்டு போடுங்க” என்று பேசி சிரித்துக்கொண்டே அங்கிருந்து நழுவிச் சென்றார்.