Skip to main content

நீதிமன்றத்தில் தடையாணை பெற்று விவசாயிகளின் வயிற்றில் அடித்த எடப்பாடி - எ.வ.வேலு!

Published on 23/12/2020 | Edited on 23/12/2020

 

DMK Velu grama saba meeting at thiruvannamalai


அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்கிற பெயரில், டிசம்பர் 23ஆம் தேதி முதல், ஜனவரி 10ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் கிராமசபைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது தி.மு.க. 


காஞ்சிபுரம் மாவட்டம், குன்னத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க. மா.செ, எம்.எல்.ஏ, எம்.பி.க்கள், ஒ.செக்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள் கலந்துகொண்டு கிராம சபாக்களில், ஆளும் அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்துரைப்பதோடு, அக்கிராமத்தில் உள்ள குறைகளைப் பொதுமக்களிடம் கேட்கின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்லவன்பாளையம் என்கிற கிராமத்தில் திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்ட சிறப்புக் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. நல்லவன்பாளையம், சமுத்திரம் கிராமத்திலுள்ள வீடுகள், கடைகளுக்குச் சென்று, வியாபாரிகள், பொதுமக்களிடம் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சிலர் தந்த மனுவை வாங்கியவர், அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கச்சொல்கிறேன் என வாக்குறுதி தந்தார்.


அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்கிற தலைப்பில் நடைபெற்ற, கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, “இங்கு திரளாக தாய்மார்கள் கலந்துகொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு வேலைப்பளு அதிகம். உங்களுக்கு செய்தித்தாள்களையோ, தொலைக்காட்சி செய்திகளையோ கேட்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அப்படியே சிறிது ஓய்வு கிடைக்கிற நேரத்தில், தொலைக்காட்சியில் மனநிறைவுக்காக நீங்கள் சீரியல் தொடர்களைத்தான் பார்ப்பீர்கள். அதனால், இந்த ஆட்சியின் அவலங்கள் முழுமையாக உங்களுக்குத் தெரியாது என்பதால், அதை உங்களுக்குக் கூறவே நான் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.


கத்திரிக்காய் சொத்தையா, வெண்டைக்காய் பிஞ்சா என்று தரம் பார்த்து வாங்கக்கூடிய தகுதி, பெண்களான உங்களுக்குத்தான் உள்ளது. காய்கறியையே பார்த்து வாங்குகிற நீங்கள், 5 ஆண்டுகாலம் நாட்டை ஆளுகிற தகுதி யாருக்கு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.


அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற அடிப்படையில் இந்த பரப்புரை நடைபெறுகிறது. அ.தி.மு.க. ஆட்சியை ஏன் நீங்கள் நிராகரிக்க வேண்டும்? ஒரு அரசாங்கம் என்பது மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். உபத்திரம் செய்யக்கூடாது. இங்கு எல்லாம் குறு விவசாயிகள்தான். உங்களுக்கு இந்த அரசு ஏதாவது உதவி செய்கிறதா எனக் கேட்டால் எதுவுமில்லை.

 

DMK Velu grama saba meeting at thiruvannamalai


எல்லாக் கட்சிகளிலும் விவசாயப் பிரிவு இருக்கிறது. கூட்டுறவு வங்கிக் கடன்களால் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடிசெய்து, விவசாயிகளின் துயரங்களைத் தீர்த்தவர் கலைஞர். அப்போது அவர் கட்சிப் பார்க்கவில்லை. அதுபோலவே இப்போது விவசாயம் சரியாக இல்லை, விவசாயிகள் கடன்காரர்களாக இருக்கிறார்கள். அதனால் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் எனச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினும், உறுப்பினர்களாகிய நாங்களும் சட்டமன்றத்தில், முதலமைச்சர் எடப்பாடியை பார்த்து கேட்டோம். மதுரை உயர்நீதிமன்றமும் விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்ய ஆலோசனை வழங்கியது. ஆனால், பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு நானும் விவசாயி தான் எனப் பகல் வேஷம் போடும் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை ஆணைப்பெற்று ஏழை விவசாயிகளின் அடிவயிற்றில் அடித்துவிட்டார். இதனால் தான் அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிக்கிறோம்.


விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை ஆதரித்து சிறு, குறு விவசாயிகள், வணிகர்களின் வயிற்றில் அடிக்கிறது எடப்பாடி அரசு. இந்தச் சட்டத்தின் மூலம் அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளை வாழவைத்து, அத்தியாவசிய உணவுப் பதுக்கலுக்கு, விலைவாசி உயர்வுக்கு, பட்டினி சாவை உருவாக்கும் எடப்பாடியின் அ.தி.மு.க. அரசை நிராகரிக்கிறோம். மோடி அரசு ஒரு வருடத்திற்கு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னதை முடக்கி, பத்தாயிரம் போலி விவசாயிகளைக் கொண்டு ஏமாற்றிய எடப்பாடி அ.தி.மு.க. அரசை தான் நாங்கள் நிராகரிக்கிறோம்.


1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வித் துறைக்கான செலவு ரூ.28 ஆயிரம் கோடி. பல பெற்றோர்கள் கனவு, தங்கள் பிள்ளைகளை மருத்துவராக்க வேண்டும் என்பது. மக்களின் ஆசையில் மண்ணள்ளி போட்டுள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க.வும். நீட் தேர்வு என ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் அடிப்படையிலா கேள்வி கேட்க்கப்படுகிறது? மத்திய பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் தேர்வுகள் வைக்கப்படுகிறது. நம் பிள்ளகைள் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். இதனால் நம் பிள்ளைகளால் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவராக முடியவில்லை. இதை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை தட்டிக் கேட்கிற உரிமை எடப்பாடி அரசுக்கில்லை. 

 

நீட் தேர்வை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் யார் தெரியுமா? தி.மு.க. தலைவர் ஸ்டாலின்தான். நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கி கிராமத்துப் பிள்ளைகளும், ஏழை எளிய குடும்பத்துப் பிள்ளைகளையும் மருத்துவராக்கியவர் கலைஞர். முதல் மதிப்பெண் பெற்ற அனிதாவில் இருந்து 13 மாணவர்கள் மருத்துவக் கனவு கலைந்து, தற்கொலை செய்து கொண்டார்கள். ஆளுங்கட்சியும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான நாங்களும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை, மத்திய மோடி அரசு நிராகரித்து விட்டது. இதைக்கேட்க, மாநில உரிமையை நிலைநாட்ட இந்த அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிக்கிறோம்.


ஒரே நாடு, ஒரே ரேஷன் என்ற போர்வையில் வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாழவும், தமிழ்நாட்டு மக்கள் வீழவும் துணைப்போகும் இந்த அ.தி.மு.க. அரசை தான் நிராகரிக்கச் சொல்கிறோம். 4-1/2 மணிநேரம் நின்றுகொண்டே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியை தி.மு.க. ஆட்சியின் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் வழங்கினார். ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முடங்கிவிட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு லோன் தருவதாக போலி வாக்குறுதி அளித்த இந்த அ.தி.மு.க. அரசைத் தான் நாங்கள் நிராகரிக்கிறோம்.


இன்றைக்கு பிரதமர் மோடி திருக்குறள் சொல்லுகிறாராம். பாரதியார் பாடலைப் பாடுகிறாராம். தமிழ் தொன்மையான மொழி என்று செல்லுகிறார். உண்மையில் உங்களுக்கு மனசாட்சி இருந்தால், இந்தியாவின் ஆட்சி மொழி தமிழ் என்று சட்டம் இயற்ற முடியுமா? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் பண்படுத்திய மண் தான் இந்தத் தமிழ்மண், இங்கு பா.ஜ.க. வேர் ஊன்ற முடியாது” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்