திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று (14.11.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். அப்போது கருத்து தெரிவிக்க முயன்ற சில நிர்வாகிகளுக்கு இந்த கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசுகையில், “சர்வாதிகாரம் இல்லாமல் எந்த செயலையும் ஒரு சரி செய்ய முடியாது. சர்வாதிகாரம் இல்லாத எந்த செயலும் நேர்மையாக இருக்காது. இறையன்பு எழுதிய புத்தகத்தைப் படியுங்கள். ஒரு நேர்மையாளர், சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும். காமராஜர், நேரு போன்ற மிகச்சிறந்த ஆட்சியாளர்கள், எல்லோரும் அன்பான சர்வாதிகாரியாகத் தான் இருந்துள்ளார்கள். கட்சி என்றால் விதி இருக்கிறது. முறை இருக்கிறது. எந்த ஒரு இயக்கத்தின், இயங்கியலுக்கும் ஒழுங்கியல் என்று ஒன்று உள்ளது. அதற்குக் கட்டுப்பட்டு இருந்தால் தான் உண்டு” எனப் பேசினார்.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், சீமான் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, “சர்வாதிகாரிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். எம்ஜிஆர் பாணியை விஜய் பின்பற்ற பார்க்கிறார். எல்லோராலும் எம்ஜிஆர் ஆக முடியாது” என்று தெரிவித்தார்.