இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.
அப்போது பேசிய ஆளுநர், நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனக் கூறியுள்ளது தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்நிகழ்வில் கேள்வி, பதில் நிகழ்ச்சியில், வெளிநாட்டில் இருந்து தொண்டு நிறுவனங்கள் அனுப்பும் நிதியை தடுக்க வேண்டியதும் முறைப்படுத்த வேண்டியதன் தேவையும் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர், வெளிநாட்டில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலம் வரும் பல கோடி ரூபாய் நிதிகள் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படாமல் நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
நாடு வேகமாக வளர்ந்து வரும் சூழலில் அதனை மட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதியுதவிகள் இருந்துள்ளன. ஸ்டெர்லைட் நாட்டின் 40 சதவீதம் காப்பர் தேவையை பூர்த்தி செய்தது. இதனை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் கூறியுள்ளார்.