Skip to main content

படப்பகலில் அட்டூழியம் செய்த இளைஞர்கள்; காருக்குள் பதறிய குடும்பம் - திக் திக் சம்பவம்!

Published on 31/03/2025 | Edited on 31/03/2025

 

Gang blocks bank employee car in broad daylight, smashes window

சென்னை மாங்காடு பகுதியைச் சார்ந்தவர் சஞ்சீவி. இவர் திண்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்காக சொந்த ஊரான மாங்காட்டிற்கு வந்து விட்டு சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெடிலம்  தேசிய நெடுஞ்சாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த  3 மர்ம நபர்கள் சுமார் 5  கிலோ மீட்டர் தூரம் சஞ்சீவி தனது மனைவி இரு குழந்தைகளுடன் வந்த காரை துரத்தி வந்துள்ளனர்.

இதில் பயந்து போன குடும்பத்தினர் சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு வாகனத்தில் நின்றவர்களிடம் உதவி கேட்ட பொழுது வேகமாக வந்த மூன்று நபர்கள் கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதத்தால் வாகனத்தின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற போது காரில் இருந்த குடும்பத்தினர்  கூச்சலிட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் வாகனத்தை நிறுத்தி அருகில் வந்ததால்   அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த திருநாவலூர் காவல் நிலையத்தைச்  சார்ந்த உதவி ஆய்வாளர் பிரபாகர் மற்றும்  இரண்டு காவலர்களிடம் புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மூன்று மர்ம நபர்களையும் பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கெடிலத்தில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த திருநாவலூர் காவல் துறையினரிடம் சஞ்சீவி தகவல் தெரிவித்ததன் பேரில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களான ரா‌ஜேஷ்(24), விழுப்புரத்தைச் சேர்ந்த  ராஜா(25),  வினோத்(22) ஆகியோர்களை கண்டறிந்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல்  செய்தனர்.

இந்த சம்பவம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த அப்பகுதி மக்களிடம் கேட்ட பொழுது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடும்பத்தினருடன் செல்லும் கார்களை குறி வைத்து திருடும் நோக்கத்துடன் தாக்குதலில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். 

சார்ந்த செய்திகள்