
தனிநபர் தரவுகளை பாதுகாக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தையே மாற்றியுள்ளது ஒன்றியரசு. இது ஒட்டுமொத்தமாக ஊழலை ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளதே தவிற தடுத்து நிறுத்தும் வகையில் இல்லை என்பதே சமூக ஆர்வளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த சமூகத்தில் உள்ள ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளும், அரசு திட்டங்களும் அதில் நடக்கும் குற்றங்களையும் ஒரு தனி மனிதன் கண்டறிந்து சமூகத்தில் சமூக நீதியை நிலை நிறுத்த இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த சட்டத்தை ஒன்றியரசு திருத்தம் செய்து ஒட்டுமொத்தமாக ஊழல்வாதிகளை காப்பாற்றவும் ஊழல்களை ஊக்கவிக்கும் வகையிலும் இந்த சட்ட திருத்தத்தை செய்தது சர்ச்சை கிளப்பியுள்ளது.
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் 44(3) பிரிவு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே மாற்றி உள்ளது. இதனால் பொதுமக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவது பெரிதும் பாதிக்கப்படவுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1)(j) பிரிவில் செய்யப்பட்டுள்ள திருத்தமானது, தகவல் வெளிப்பாட்டில் தனிமனித தகவல்களுக்கு ஒட்டுமொத்தமாக விலக்கு அளிக்கிறது. பொதுச் செயல்களுக்கோ, பொது நலனுக்கோ சம்மந்தம் இல்லாத பட்சத்தில் அல்லது ஒருவரின் தனியுரிமையை ஊடுருவும் மற்றும் ஆக்கிரமிக்கும் பட்சத்தில் தகவலை தரக்கூடாது என்று ஆர்.டி.ஐ. சட்டத்தில் ஏற்கனவே இருந்த விலக்கை இந்தத் திருத்தம் முற்றிலுமாக ஒழித்து உள்ளது. மேலும் இந்தத் திருத்தம், ஆர்.டி.ஐ. சட்டத்தின் 8(1) பிரிவில் உள்ள ஒரு முக்கியமான நிபந்தனையான ‘பாராளுமன்றத்திற்கோ, சட்டசபைக்கோ மறுக்க முடியாத எந்த ஒரு தகவலும் தனிநபர் யாருக்கும் மறுக்கப் பட முடியாது’ என்பதையும் ஒழித்து உள்ளது.
தகவல் பெற்று, அரசாங்கத்தின் பொறுப்புடைமையை நிலை நிறுத்தும் அதிகாரத்தை லட்சக்கணக்கான மக்களுக்குத் தகவல் அறியும் உரிமை சட்டம் வழங்கி உள்ளது. கூட்டாக கண்காணிக்கும் அதிகாரம் பெறவும் தங்களது உரிமைகள் மற்றும் உரிமையானவற்றை அடையவும், தனிநபர் தகவல் உட்பட நுட்பமான தகவல் பெறுவது எவ்வளவு அவசியமானது என்பது தெரியும். இந்தச் சட்ட திருத்தங்கள், தகவல்கள் வெளிப்படுத்துவதில் தடைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுவரும்.
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ல் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், அந்த சட்டத்தை அடிப்படையாகவே வலுவிழக்கச் செய்கின்றன. தனிநபர் தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பிற்கான சட்ட வரையறை, தகவல் அறியும் உரிமை சட்டத்தை முழுமை அடையச் செய்யும் வண்ணம் இருக்க வேண்டுமே தவிர அந்த சட்டம் நீர்த்துப் போகும் வண்ணம் இருக்கக் கூடாது. ஆனால், டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் 1(2) பிரிவு, இந்த சட்ட விதிகள் செயல் பாட்டிற்கு வரும் தேதியை அறிவிக்கும் அதிகாரத்தை மத்திய அரசிற்கு வழங்குகிறது. பல்வேறு பிரிவுகளுக்கு பல்வேறு தேதிகள் நிர்ணயிக்கப்படலாம். அதனால், இந்த சட்டத்தின் 44(3) பிரிவை செயல்படுத்த வேண்டாம். இல்லை என்றால் சமூகநீதி முற்றிலும் மறுக்கப்பட்ட ஒன்றாகவும் இது ஒரு வகையான மறைமுகமாக அடிமைப்படுத்தும் வகையாகவும் உள்ளது.

இது குறித்து பேசிய அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், “ ஒரு தனிநபர் பற்றி தகவலை தெரியவில்லை என்றால் அவர்களைபற்றி முழு விவரங்களையும் மூடி மறைக்கப்படும். உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால் ஒரு அரசு அதிகாரி பட்டம் பெறாமலே போலியான சான்றிதழை வைத்துக்கொண்டு பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்தால் அது மோசடி, அந்த மோசடியை வெளியில் கொண்டுவரவேண்டும் என்றால் இவரின் சான்றிதழை பெற்றுப் பார்க்கவேண்டும். அதற்கு இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் உறுதுணையாக உள்ளது. தற்போது அதை நீங்கள் கேட்முடியாது என்பதே இந்த சட்டம் சொல்லுகிறது. இப்படி அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை மறைக்கவே இந்த ஒன்றிய அரசு திட்டமிட்டே இந்த செயலை செய்துள்ளது. இதனை உடனடியாக மாற்றி அமைக்கவேண்டும் என்றார்.