சென்னை ஓட்டேரியில் உள்ள திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் திருவிக நகர் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது. மழை நீர் தேங்காத படி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இதற்கு பின் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எல்லாரும் பாராட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எதிர்க்கட்சிக்காரர்கள் எதாவது சொல்லுவார்கள். முதல்வர் சொல்லுவது போல், மக்களுக்கு நல்லது செய்யவே நேரமில்லாத போது அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்லை” எனக் கூறினார்.
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “கடந்த ஆண்டு பெருமழையின் போது மழையால் தத்தளித்த பகுதிகளில் இந்த ஆண்டு எவ்வித பாதிப்பும் இன்றி மாநகரத்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இருந்தாலும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருந்த இடங்களில் நீர் வெளியேற்றப்பட்டு விட்டது. அப்பகுதிகளில் கழிவுகளும் அகற்றப்பட்டு வருகின்றன. நீர் தேங்கிய பகுதிகளில் மருத்துவ முகாம்களையும் நடத்தியுள்ளோம். 3000க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ முகாம்களில் பயன் அடைந்துள்ளனர்.
தற்போது முடிந்த கனமழையில் தண்ணீர் தேங்கிய பகுதிகள் அடுத்த மழை வரும் பொழுது நீர் தேங்காத படி இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனக் கூறினார்.