சென்னையில் நடைபெற்ற தி.மு.க. சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு இன்று (18.01.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, பொன்முடி, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ, கிரிராஜன் எம்.பி. உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் இந்த மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “இந்த மாநாடு வாயிலாக, நான் அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.வை பொருத்தவரைக்கும், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்தப் பார்க்கிறது. அதற்காகத்தான் ஒரே தேர்தல் என்று கிளம்பியிருக்கிறார்கள். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள். பா.ஜ.க.வைப் பொருத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல்திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும்.
இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும். இது, பா.ஜ.க. என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல. இன்றைக்குப் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியைச் சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும். பா.ஜ.க.வும், பா.ஜ.க.வுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க.வை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது.
இந்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்” எனப் பேசினார்.