அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும், புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் தொகுதி பங்கீடு செய்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை அதிமுக தேர்தல் அறிக்கை குழு தங்களது அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடமும் அளித்துள்ளது. தேர்தல் அறிக்கை தயாராக இருப்பதால் இன்றுடன் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீடை முடித்துவிடலாம் என்று அதிமுக தலைமை முடிவெடுத்திருப்பதை தேமுதிகவிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகும் என்று தெரிவித்தார்.

தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்பான செய்தி அதிமுகவின் தொலைக்காட்சியான நியூஸ் ஜெ.வில் வெளியானது. இதனால் அஇருகட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்படுவது உறுதியானது என்று இருகட்சியைச் சேர்ந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.