Skip to main content

“தமிழ்நாட்டைப் பாருங்கள்.. இந்தி வேண்டாம் என்று தைரியமாக சொல்கிறார்கள்” - ராஜ் தாக்கரே பேச்சு

Published on 31/03/2025 | Edited on 31/03/2025

 

Raj Thackeray's says the people of Tamil Nadu are boldly saying no to Hindi in the language issue

மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையில் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி பா.ஜ.க தவிர தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். அதே சமயம், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான், கல்வி தொடர்பான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.  இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு உருவாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து, தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது. 

இந்த நிலையில், இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு போராடி வருவதை சுட்டிக் காட்டி மகாராஷ்டிராவைச் சேர்ந்த கட்சித் தலைவர் அம்மாநில மக்களிடம் பேசியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில், நவநிர்மாண் சேனா என்ற கட்சி செயல்பட்டு வருகிறது. இக்கட்சியின் தலைவராக ராஜ் தாக்கரே பொறுப்பு வகித்து வருகிறார். மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் நேற்று (30-03-25) பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய ராஜ் தாக்கரே, “நமது மும்பையில், அவர்கள் மராத்தி பேசத் தெரியாது என்று சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்களின் கன்னத்தில் அறை கொடுப்போம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சொந்த மொழி உண்டு, அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில் மராத்தி மதிக்கப்பட வேண்டும். நீங்கள் இங்கு வசித்து, அந்த மொழியைப் பேசவில்லை என்றால், நீங்கள் தகுந்த முறையில் நடத்தப்படுவீர்கள். நாளையில் இருந்து ஒவ்வொரு வங்கியையும், ஒவ்வொரு நிறுவனத்தையும் சரிபார்க்க வேண்டும். அங்கெல்லாம், மராத்தி மொழி பயன்படுத்தப்படுகிறதா? என்று சரிபார்க்க வேண்டும். நீங்கள் அனைவரும், மராத்தி மொழிக்காக உறுதியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டைப் பாருங்கள், அங்கு இந்தி வேண்டாம் என்று மக்கள் துணிந்து சொல்கிறார்கள், கேரளாவில் கூட.. 

முதலில், வாட்ஸ் அப்பில் வரலாற்றைப் படிப்பதையும், சாதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் நிறுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா இளைஞர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அப்படி பார்ப்பதால் அரசியல் ரீதியாக, உங்களைப் பிரிக்கவும், மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்கவும் முயற்சி நடக்கிறது. இதனால் நமது கவனம் திசைதிருப்பப்படுகிறது. அதானிக்கு நிலங்களை வழங்குவது போன்ற பணிகள் அமைதியாக செய்யப்படுகின்றன. அதானி நம் அனைவரையும் விட மிகவும் புத்திசாலியாக இருக்கிறார். 

நீர்நிலைகள், மரங்களைப் பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. மாறாக ஒளரங்கசீப்பின் கல்லறையை பற்றி கவலைப்படுகிறோம். வரலாற்றின் பெயரால் மக்கள் போராட வேண்டும் கட்டாயத்தில் உள்ளனர். அரசியல்வாதிகள் இந்த பிரச்சனைகளுக்கு மேலும் தீயை மூட்டுகின்றனர். முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் மகாராஷ்டிராவில் 27 ஆண்டுகள் மராட்டியர்களுடன் போரிட்டார், சத்ரபதி சிவாஜி மகாராஜின் மரபை நசுக்க முயன்றார். ஆனால், ஒளரங்கசீப் இறுதியில் தோல்வியடைந்தார். நாம் அந்த மன்னரை கொன்று விட்டோம். மராட்டியர்களால் தோற்கடிக்கப்பட்டவர்களின் கட்டமைப்புகளை நாம் அழிக்கக் கூடாது. நாம் அவர்களை அடக்கம் செய்தோம் என்பதை உலகம் அறிய வேண்டும். எல்லோருக்கும் திடீரென்று ஒளரங்கசீப் நினைவுக்கு வருவது எப்படி?. படம் பார்த்து விழித்தெழுந்த இந்துக்களால் எந்த பயனும் இல்லை. வாட்ஸ் அப்பில் வரலாற்றை படிக்க முடியாது, புத்தகங்களைத் தான் படிக்க வேண்டும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்