
திமுக இளைஞரணியின் 45ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “நான் துணை முதலமைச்சர் ஆகப்போவதாக செய்திகள் வருகின்றன. அந்த செய்திகள் அனைத்தும் வதந்திகள். அனைத்து அமைச்சர்களும், முதல்வருக்கு துணையாக இருப்போம். அது போல், திமுக அமைப்பாளர்கள் அனைவரும் முதல்வருக்கு துணையாக இருப்போம். எவ்வளவு பொறுப்பு வந்தாலும், என் மனதிற்கு மிக மிக நெருக்கமான ஒரு பொறுப்பு என்றால் அது இளைஞரணி செயலாளர் பொறுப்பு தான்” எனப் பேசினார்.
இந்த நிலையில், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், துணை முதல்வர் பதவி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார். நான் கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டவன். 60 ஆண்டுகளாக கட்சியின் வளர்ச்சிக்கு பாடுப்பட்டவன். கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நடப்போம். ” என்று கூறினார்.