தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் நேற்று (20.06.2023) தொடங்கி ஜூலை மாதம் 20 ஆம் தேதி வரை பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியை மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா ஆர்.நல்லகண்ணு அவர்கள் முதல் கையெழுத்திட்டார்.
இதையடுத்து மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் வெற்றி பெற இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மீண்டும் மோடி ஆட்சிக்கு வர முடியாத அளவுக்கு அரசியலில் சூழல் நிலவுகிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது. கண்டிப்பாக தேர்தலில் தோற்பார்கள். இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக அணி 40 இடங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது” எனத் தெரிவித்தார்.
தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “தமிழ்நாட்டிற்கு கேடு” எனப் பதிலளித்தார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறையின் செயல்பாடு குறித்து பேசும்போது, “அமைச்சருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அமலாக்கத்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மனிதநேயமற்ற முறையில் உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளனர்.” என்றார். ராஜ்நாத் சிங் 2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊழலை ஒழிப்போம் என்று பேசி இருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையில், “தமிழ்நாட்டில் இருந்து பாஜகவை மக்கள் ஒழித்து விடுவார்கள். இது பெரியார் மண். அறிஞர் அண்ணா, கலைஞர் பக்குவப்படுத்திய மண். எனவே தமிழகத்தில் பாஜக ஒருபோதும் அரசியலில் வெற்றி பெற முடியாது” என்று தெரிவித்தார்.