கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தனது இரண்டாவது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் மே 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான முடிவுகள் வரும் மே 15ஆம் தேதி அறிவிக்கப்படும். 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இந்தத் தேர்தல் வெற்றி ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கர்நாடக மாநில முதல்வர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதன்படி, கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி சாமுண்டீஸ்வரி சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று, சித்தராமையா படாமி சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
படாமி தொகுதியில் சித்தராமையாவுக்கு எதிராக பாஜக வேட்பாளர் பி.ஸ்ரீராமுலு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.