தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.வில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பிஜேபி கூட்டணி சார்பில் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உள்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வளம் வருகிறார்கள். இருந்தாலும் திமுக, அதிமுக, டிடிவிக்கு இடையே தான் கடும் போட்டியும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான் பிஜேபி கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தொகுதியில் பல ஊர்களில் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மேலும் தேர்தல் பிரச்சாரம் செய்யவும் இருக்கிறார். இந்த நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சார செய்யப்போவதாகவும், எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று சொல்லி இருக்கிறார். அதன் அடிப்படையில் தான் டிடிவி மனைவியான அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில், முதன் முதலில் போடி தொகுதியில் உள்ள முத்தையன் செட்டிபட்டி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரச்சாரத்தை அனுராதா தொடங்கினார். அப்போது அங்கு குடியிருந்த பெண்கள் மாலை சால்வை அணிவித்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து அனுராதா பேசும் போது, உங்கள் வீட்டுப் பிள்ளை செல்வன் டிடிவி மனைவியாக உங்களிடம் நான் வந்திருக்கிறேன். அவர் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய சென்று விட்டதால் ஒரு வாரம் பிரச்சாரத்திற்கு வரமாட்டார். அதனால் நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். இந்த ஜென்மத்தில் நான் கொடுத்து வச்ச பாக்கியம் இது. 16 வருடத்திற்கு பிறகு இங்கு வந்திருக்கிறார். அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றுதான் எனது தாழ்மையான வேண்டுகோளை உங்களிடம் வைக்கிறேன்” என்று வாக்காளர் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
அதோடு ஜாதி ரீதியாகவும் தலைவர்களை சந்தித்தும் வீடுகளுக்குள் சென்று வாக்காளர்களிடமும், பெண்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார் அது போல் பிரச்சார வேனில் ஒவ்வொரு பகுதியாக சென்று குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காள மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.