2021 சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி வசூலிப்பு கூட்டத்தை நடத்திவருகின்றன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதன் பொதுச்செயலாளர் வைகோவிடம் ஒவ்வொரு மதிமுக மாவட்ட நிர்வாகத்தினரும், தேர்தல் நிதியைத் தருகின்றனர். அதன்படி திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தின் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் சீனி.கார்த்திகேயன், 10 லட்ச ரூபாய் தேர்தல் நிதியை வைகோவிடம் வழங்கினார்.
இதற்கான விழா பிப்ரவரி 16ஆம் தேதி இரவு திருவண்ணாமலை நகரத்தில் உள்ள மதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதேபோல் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பிலும் நிதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய வைகோ, “பெரியார், அண்ணாவின் திராவிட லட்சியங்களைப் பாதுகாக்கவும், திராவிட இயக்கக் கொள்கைகளைப் பாதுகாக்கவும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் இந்துத்துவா, சனாதான இயக்கக் கொள்கைகளை முறியடிக்கவே மதிமுக, திமுகவுடன் கூட்டு சேர்ந்து இயங்கிவருகிறது.
மேலும் இந்த கூட்டணி தேர்தலிலும் தொடர்கிறது. தமிழகத்தின் நலன் மீது அக்கறை கொண்டும் இயங்கும் மதிமுக, சுற்றுச்சூழல் பிரச்சனை முதல் பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடுகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென பல ஆண்டுகளாகப் போராடிவரும் மதிமுக, 78 லட்சம் ரூபாய் கட்சி நிதியை எடுத்துச் செலவுசெய்து அவர்களை தூக்குத் தண்டனையில் இருந்து காப்பாற்றியது. அதானி, அம்பானி குடும்பங்களுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காகவும் வேலை செய்யும் பிரதமர், ஏழை மக்களின் குடும்பத்துக்காக எந்த வேலையும் செய்யவில்லை" எனச் சாடினார்.