ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை யார் வழி நடத்துவது தலைமை ஏற்பது என்ற நிலையில் சசிகலா அதிமுகவின் பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார்.பின்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு,பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பு நிலை என்று அதிமுக கடும் பிரச்சனைகளை சந்தித்தது.இது குறித்து தினகரன் பேசும் போது கொங்கு மண்டலம் அதாவது மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுத்தால் துரோகம் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அனைவரும் ஒரு மனதாக தேர்ந்து எடுத்தோம். இல்லையென்றால் சிறை செல்லும் முன் சசிகலா என்னை முதல்வராக்கி இருப்பார் என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கோவை சூலூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து டிடிவி.தினகரன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறும் போது முதல்வர் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தார். கொங்கு மண்டலத்தை சேர்ந்த மக்கள், எப்போதும் துரோகக் கூட்டத்திற்கு துணை நிற்க மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் முதல்வராக தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர் பாஜகவின் ஏஜென்டாகவே செயல்பட்டு வந்தார்.
அதன்பிறகு தான் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்கட்டும் என்று எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம். சிறைக்குச் செல்லும் முன்பு கூட சசிகலா நினைத்திருந்தால் என்னை முதல்வராகத் தேர்வு செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் பதவிக்கு ஆசைப்படுவர்கள் அல்ல என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி நான்கு கால் பிராணி போல எப்படி தவழ்ந்து வந்து பொதுச்செயலாளர் சசிகலா காலில் விழுந்தார் என்பது எல்லோரும் பார்த்து இருப்பீர்கள். முதல்வராக வேண்டும் என்று ஆசை இருக்கலாம். ஆனால் பதவி வெறி இருக்கக்கூடாது. முதல்வர் எடப்பாடியின் பதவி வெறியால் தான் தமிழ்நாட்டில் 22 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் வந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தீர்மானித்து, குஜராத்தின் மோடியா? அல்லது தமிழகத்தின் லேடியா? என்று சவால்விட்டார். ஜெயலலிதா யாருடன் இனி கூட்டணி கிடையாது என்று கூறினாரோ அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதிமுக என்ற மாபெரும் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டு பயந்து, நடுங்கி வருகின்றனர் என டிடிவி.தினகரன் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார்.